In Autism சினிமா விமர்சனம் மதியிறக்கம்

Rain Man


 


ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம் தெரியாவிட்டாலும், ஜீன்களின் கோளாறுகள்தான் இதன் காரணம் என்று உணரப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த குறைபாடு உள்ளவர்களிடம், சாதாரணமாக உள்ளவர்களின் ஜீன்களில் ஏறக்குறைய ஏழு வித்தியாசமான நிலைப்பாடுகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.

பலசமயங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களை உருவத்தோற்றத்தின் படி வேறுபடுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். தற்சமயத்தில் இதன் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு ஏற்றபடியான சிகிச்சைமுறைகள் கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குழந்தைகளின் வயது மூன்றிற்கு குறைவாக இருக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த நோய் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா எனக் கண்டறியலாம்.

இந்தக் குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரணமாக சமூகத்தில் பங்குபெறமுடியும். கல்வி நிறுவனங்களில் படிக்க, வேலை பார்க்கும் அலுவலகங்களில். ஆனால் இந்த நோய்க்கான முழுமையான தீர்வு என்பது இதுவரை சாத்தியப்படாமலே இருக்கிறது.

எனக்கும் இதைப்பற்றி நேரடியாகவே தெரியும், எப்படியென்றால் நான் பிறந்து வளர்ந்த இடத்தில், அறிவாலயம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஒரு பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியின் பேருந்து எங்கள் வீட்டை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு நான் டாட்டா காட்டுவேன். அதைப்போலவே அவர்களும். கோயிலுக்கு செல்லும் பொழுதும் அவர்கள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதும் டாட்டா காண்பிப்பதுண்டு. அதில் அவர்கள் அடையும் சந்தோஷம் சொல்லிப்புரியாது. இதே போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணுக்கும் இந்த நோய் இருந்தது. அந்தப்பெண்ணை பார்க்க பாவமாக இருக்கும் எனக்கு. ஆனால் அந்தக் குடும்பத்தின் மனநிலை சற்று வித்தியாசமாக இருக்கும்.

அதாவது உலக அளவிலேயே இந்த மாதிரியான ஆட்டிஸம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம், குணப்படுத்த வேண்டாம் என்பதற்கான இரண்டு வகையான மனநிலைகள் இது சம்மந்தப்பட்ட குடும்பங்களிடம் நிலவுகின்றன. இதில் குணப்படுத்த வேண்டாம் என்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சிகிச்கையளிக்கவில்லை என கட்டுரைகள் சொல்கின்றன. இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன அந்த வீட்டினரிடம் இந்த மனநிலையை பார்த்துள்ளேன். அவர்களைப் பொறுத்தவரை இந்த நோயுடன் இருந்தாலும் அவர்களுடைய பிள்ளையே அந்தப் பெண் என்றும் அதற்கான சிகிச்சை தேவையில்லையென்றும் அவர்கள் என் பெற்றோரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதில் சாவன்ட்(The autistic savant phenomenon is sometimes seen in autistic people. The term is used to describe a person who is autistic and has extreme talent in a certain area of study) என்றொரு வகையுண்டு அவர்களுக்கு, இந்த நோய் இருந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதைகளாக, சிலசமயம் நாம் நினைக்க முடியாத அளவில் மேதைகளாக இருப்பார்கள். சாவன்ட் என்பதற்கு அறிவாளிகள் அல்லது தெரிந்துகொள்பவர்கள் என்ற பொருள்வரும்(The word comes from the French word savant, meaning scientist (literally, knowing)). டானியல் டெம்மெட் என்ற ஒரு இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அற்புதமான திறமையுண்டு அது, அவன் மனனம் செய்யும் திறமை. அவன் பை என்றழைக்கப்படும் கணித மாறிலியின் 25514ம் இலக்கம் வரை கணக்கிட்டு அதற்கான ஐரோப்பிய சாதனை விருதைப் பெற்றவன். பையின் மதிப்பு 3.14 இது 14க்கு பிறகு முடிவில்லாதது, இந்த தொடர்ச்சியையே அந்த சிறுவன் கணக்கிட்டு சொல்லியது. இது போன்ற திறமையிருக்கும் பலருக்கு அவர்கள் அதை எவ்வாறு கணக்கிட்டார்கள் எனச் சொல்லத் தெரியாது ஆனால் இந்த சிறுவனுக்கு அவன் கணக்கிட்ட உத்தியையும் சொல்லத்தெரிந்தது ஒரு அற்புதமான விஷயம்.

ஆனால் மற்ற சில பாதிக்கப்பட்டவர்களைப்போல இந்த சிறுவனால், மற்றவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது துரதிஷ்டமே.

இந்த வகையான பாதிப்புள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது, இது ரெய்ன் மேன்(Rain Man) என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திரைப்படத்தைப்பற்றியும் கொஞ்சம்.


தமிழ் மசாலாப்படத்துக்கான அத்துனை விஷயமும் உள்ள ஒரு படம் தான் ரெய்ன்மேன், ரொனால்ட் பாஸ்(Ronald Bass), மற்றும் பாரி மோரோவ்(Barry Morrow) எழுதி, பாரி லெவின்ஸன்(Barry Levinson) இயக்க கிம் பீக்(Kim Peek) என்ற ஒரு மூளைவளர்ச்சி தவறிய(மேக்ரோசெப்பாலி) ஆட்டிஸ்டிக் சேவன்ட் கிடையாது, வேறுவகையானது, ஒரு உண்மையான கதாப்பாத்திரத்தைப்பற்றிய படம் இது.

அந்த வருடத்திற்கான, சிறந்த கதாநாயகன், சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதைக்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் இது. (முழுவிவரம் கடைசியில்). நான் முதலில் இந்தப்படத்தைப் பார்த்தது அதில் நடித்து ஆஸ்கார் பெற்ற டஸ்டின் ஹாப்மென்னுக்காக(Dustion Hoffman) இல்லை. ஒரு இடத்தில் டாம் குருயிஸ்(Tom Cruise மிகவும் பிடித்த நடிகர்) உடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்ற காரணத்தால் சொந்தமாக வாங்கி பார்த்து வியந்துபோன படம் இந்த ரெய்ன் மேன்.

பணக்கார அப்பாவின் மகன் சார்லி பப்பிட்(Charlie Babbitt), ஒரு முறை அப்பாவிற்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போக, அப்பா கோபமாகி தன் கார் திருட்டுபோய்விட்டதாக போலிஸில் சொல்லிவிட. இரண்டுநாள் ஜெயிலில் இருந்த சார்லி கோபமாகி அப்பாவிடம் திரும்பாமல் வேறு இடத்திற்கு போய்விடுகிறார். பின்னர் வாகனங்களை விற்பவராக மாறிவிட்ட சார்லிக்கு அவன் தந்தை இறந்து போன விஷயம் தெரியவர இறுதிமரியாதை செலுத்த வருகிறான். அப்பொழுதுதான் தன் தந்தை மூன்று மில்லியன் சொத்துக்களையும் ஒரு ட்ரெஸ்டி பெயரில் எழுதுவைத்துவிட்டு, அதன் பெனிபிஷியரியாக(உபயோகப்படுத்துபவராக) யாரையோ வைத்துவிட்டு போய்விட்டதாகவும் இவனுக்கு தன் தந்தையின் ரோஜாப்பூத்தோட்டம் மட்டுமே கொடுத்ததும் தெரியவரும்.

பின்னர் யார் அந்த உபயோகப்படுத்தும் ஆள் எனத்தேடி சார்லி நகரும் பொழுது சூடுபிடிக்கத்தொடங்கும் எக்ஸ்ப்ரஸ், இங்கேதான் வருவார் ரெய்மண்ட் பப்பிட்(Raymond Babbitt - Dustion Hoffman) என்ற சார்லியின் சகோதரர். இவர் ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். இவர் பெயரில் தான் சார்லியின் தந்தை மொத்த சொத்தையும் ட்ரெஸ்டி வழியாக எழுதுவைத்திருப்பார். அதற்கு காரணம் ரெய்மண்டிற்கு பணம் என்ற ஒரு விஷயமே தெரியாது. பின்னர் சார்லி தன் சகோதரனை கடத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து அந்த ட்ரெஸ்டியை மிரட்டுவது என பக்காவான மசாலாப்படம். ரெய்மண்ட் விமானத்தில் ஏறமாட்டேன் எனபயந்து பயணச்சீட்டு எடுத்த விமானத்தை மறுக்க. சகோதரர்களின் சாலைவழிப்பயணம் தொடங்கும்.

ரெய்மண்ட் பற்றி, ரெய்மண்டின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை, யாரையும் அவர்கள் கண்களை நோக்கிப்பார்க்காமல், தனக்கென்ற வாழ்க்கையை வாழும் ஒரு திறமையான, மனனம் செய்வதில் மிகத்திறமையான ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். அதாவது முட்டாள் விஞ்ஞானி. தான் படிக்கும் பார்க்கும் அத்துனை விஷயங்களையும் மனனம் செய்யும் திறமையுள்ள ரெய்மண்டை அவருடைய பழக்கவழக்கங்களிலில் இருந்து மாற்றினாலோ இல்லை, வேறுஒன்றை செய்ய கட்டாயப்படுத்தினாலோ தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு கத்துவார்.

இப்படியாக செல்லும் இந்தப்பயணத்தில் முதலில் தன் சகோதரனின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சார்லி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை கண்டுகொள்ளும் படி சொல்லியிருப்பார் இயக்குநர். முன்பே சொன்னதுபோல் ஒரு அச்சுஅசல் மசாலாப்படம். ஆனால் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார்கள் அனைவரும்.

தன்னுடைய கடன் செலுத்தமுடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு சகோதரனுக்கு மொத்த பணத்தை எழுதிவைத்துவிட்டாரே எனக்கோபப்படும் இடங்களிலும் விமானத்தில் பயணம் செய்ய பயந்து ரெய்மண்ட் கத்தும் இடத்தில் இயலாமையையும் பின்னர் தன் சகோதரனால் சீட்டுக்கட்டில் அதிக பணம் கிடைத்ததும் சந்தோஷப்படும் இடத்திலும் வெகு அழகாக நடித்திருப்பார் டாம் குருஸ்.

படத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாரென்றால் அது டஸ்டின் ஹாப்மென்தான். தான் முதலில் தோன்றும் இடத்திலிருந்து முடிவு வரை அந்த கதாப்பாத்திரத்தின் ஆளுமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். நடை உடை பாவனைகளில் பிரமாதப்படுத்தியிருப்பார். தன் சகோதரனும் அவன் காதலியும் இணைந்திருக்கும் ஒரு தர்மசங்கடமான நேரத்தில் அங்கு வந்து அவர் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் வெளிப்படுத்தும் ஒரு மௌனம் அற்புதமோ அற்புதம், காட்சி அமைப்பும் பிரமாதமாகயிருக்கும்.

தன் புத்தகத்தை எடுத்த சார்லி படிப்பதை பிடிக்காமல் காட்டும் முகபாவத்தில் ஆகட்டும், ஒவ்வொரு விஷயமாக தன் ஞாபகத்திலிருந்து அவர் சொல்லும்பொழுது அவருடை சலனமற்ற கர்வமற்ற முகத்திலாகட்டும், ஒரே இரவில் டெலிபோன் டிக்ஷ்னரியிலிருந்து ஏ முதல் ஜி பாதி வரை மனப்பாடம் செய்துவிட்டு பின்னர் அடுத்தநாள் பார்க்கும் அட்டன்டர் பெண்ணின் தொலைபேசி நம்பரை சொல்லவதிலாகட்டும், பின்னர் கொட்டப்பட்ட டூத்பிக்கின் எண்ணிக்கையை சில வினாடிகளில் சொல்வதிலாகட்டும் படம் காண்பித்திருப்பார் மனுஷன்.


Kim Peek

கடைசியில் தமிழ்ப்படம் போல் முடிக்காமல் ரெய்மண்ட் பப்பிட் தான் இருக்கும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவதாக முடித்திருப்பார் இயக்குநர். அந்த ரெய்மண்ட் பப்பிட் என்ற கதாப்பாத்திரம் முன்பே சொன்னதைப்போல் ஒரு உண்மைக் கதாப்பாத்திரம். கிம் பீக், சுமார் 9600 புத்தகங்களை மொத்தமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார். அந்த நபரின் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருப்பார்கள் படத்தில். நிச்சயமாக படத்தில் கலந்திருக்கும் நகைச்சுவை உணர்வுக்கும், டஸ்டின் ஹாப்மென், மற்றும் டாம் குருஸ்ஸின் நடிப்பிற்கும் சேர்த்து ஒருமுறை பார்க்கலாம்.

Academy - 1988
Best Actor Dustin Hoffman - Win
Best Director Barry Levinson - Win
Best Original Screenplay Ronald Bass, Barry Morrow - Win
Best Picture - Win

Related Articles

7 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  மதியிறுக்கம் (Autism) - ஒரு எளிய அறிமுகம் படித்திராவிட்டால், ஒரு எட்டு பார்த்துடுங்க...

  ReplyDelete
 2. நன்றி பாஸ்டன் பாலா, பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 3. இந்த படத்தோட விமர்சனத்தை கீத்து கொட்டாய்'லே எழுதலாமின்னு இருந்தேன்...

  எனக்கு ரொம்ப பிடிச்ச படம்...
  :)

  ReplyDelete
 4. நானும் இந்த படத்த பார்த்திருக்கேன் மோகந்தாஸ்.... (டிவிடிக்கு நன்றி: அய்யனார்)

  எனக்கும் பிடிச்ச படம். குறிப்பாக டஸ்டின் ஹாப்மேனுக்கு நடனம் சொல்லித்தருவதும், லிப்டில் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு எப்படியிருக்கிறது என்று கேட்கும் அந்த ஹீரோயின் :)))

  ReplyDelete
 5. coincidence!...

  http://kundaspecial.blogspot.com/2007/03/autism-growing-epidemic.html

  ReplyDelete
 6. தமிழ்ப்பிரியன், நான் இந்தப் படத்தைப் பற்றி எழுதியது, 2005ல்.

  இப்ப மறு ஒளிபரப்பு.

  ReplyDelete
 7. வணக்கம் மோகன்தாஸ்
  yuvraaj படமும் இப்படிப்பட்ட கதைதானே

  ReplyDelete

Popular Posts