In Only ஜல்லிஸ் சுஜாதா பாப்லோ நெருதா

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.)

"அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது’

என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து வாசலில் வந்து நிற்கும் பெண்களையும் கவனித்து, ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தேன். அலுக்கவில்லை.

அரவிந்தன் வழக்கம் போல் அட்டை போட்டு, ‘Bill Bryson-ன் ‘A Short History of Nearly Everything’ என்ற புத்தகத்தை அன்பளித்தார். ஸபானிஷ் மொழியில் இளங்கலை படிக்கிறார்.

‘தமிழ்க் கவிதைகளை ஸ்பானி-ஷில் மொழிபெயர்ப்பது எளிது. அங்கிருந்து இறக்குவதுதான் கஷ்டம். அதில் reflexive verbs ஏராளம்’ என்றார்.

இப்படி யாராவது உண்மை-யாகவே ஸ்பானிஷ் படித்து, தமிழில் உலவும் நெருடாபுருடாக்களைத் தெளிவாக்கலாம்."

எல்லாருக்கும் புரிதா இந்த நெரிதா மேட்டர். - இது நான்.

மொத்தம் பதினேழு ஓட்டுக்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது, ஒரு நபர் தனக்கு அந்தக் கதை சுத்தமாகப் புரியவில்லையென்று சொன்னதும் நினைவில் வருகிறது. ஓட்டுப்போட்ட அத்தனை நபர்களுக்கும் நன்றி.

முன்பு தமிழோவியத்திற்காக எழுதிய செகுவாரா பற்றிய குறிப்புகளையும் சேர்த்து.

என்ன ஒரு தொடர்பு, செகுவாராவிற்கு பாப்லோ நெருதாவை பிடிக்குமாம். அதிகம் படிக்கவும் செய்வாராம். ஆனால் பாப்லோ நெருதா ஒரு பாடிஸ்டாவின் ஆதரவாளராம். வேடிக்கை....

-----------------------செகுவாரா---------------------------


எனக்கு எப்பொழுதுமே ஒரு விஷயம் எப்படி எனக்கு தெரியக்கிடைத்தது என்பதனை யோசித்து ஒருவாறு உறுதிசெய்து கொள்வேன். அதாவது முதன் முதலில் எனக்கு செகுவாராவை தெரிந்ததெப்படி என்பதைப் போன்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள சில மாலை நேரங்களை இழப்பதைக் கூட அனுமதிப்பேன் இப்படித்தான் ஒருமுறை செகுவாராவை எனக்கு எப்படி தெரியவந்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக்காலத்தில் இருந்தே கொஞ்சம் அமேரிக்கா என்றால் அலர்ஜி அதன் ஒரு பக்கமாய் தெரிந்து கொண்ட கியூபா நாட்டு சரித்திரமும் அதன் பின்ணணியில் இருந்த பிடல் காஸ்ட்ரோவும், செகுவாராவும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

த பைசைக்கிள் டைரிஸ் படம் பார்ப்பதற்கு முன்பே கொஞ்சம் அறிமுகம் இருந்தது. என்றாலும் எப்படி த ப்யூட்டிபுல் மைண்ட் பார்த்தபின் ஜான் நேஷ்ஷைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததோ அதைப்போல் இந்தப் படம் பார்த்தபின்னர் செகுவாராவைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். சன்டிவியின் டாப்டென் மூவிஸில் சொல்வதைப் போல் இந்தப் படத்தை ஏற்கனவே ஏகத்திற்கு அலசிவிட்டதால் நேராய் விஷயத்திற்கு வருகிறேன்.

உலகம் முழுவதும் இப்பொழுதெல்லாம் புரட்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்க முயலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை அல்லது ஆள் செகுவாரா(சேகுவாரா - ஆரம்பத்தில் இருந்து அப்படியே பழகிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்க.) ஆனால் இதற்கெல்லாம் அவர் தகுதியானவர் தானா? உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைக்கான போர் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. ஒருவருக்கு விடுதலைப்போராகப்படும் விஷயம் மற்றவருக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. அப்படியிருக்க எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கியூபாவின் வெற்றிகரமான விடுதலையில் பங்கு கொண்டதற்காக இவருக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை இவருக்கு உரித்தானதுதானா? அப்படியென்ன சாதனையை செய்துவிட்டார் செகுவாரா? கியூபாவைத் தவிர்த்து அவர் போராட்டத்தில் இறங்கிய பொலிவியா மற்றும் காங்கோவில் அவருடைய போராட்டம் தகர்க்கபட்டது மட்டுமல்லாமல், அவர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த அவர் வகையான கொரில்லாப் போரும் தோற்றுப்போனதுதானே. பின்னர் எந்தவகையில் அவரை உலகம் மிகப்பெரும் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கேள்விக்களுக்கான விளக்கங்களைத் தேடி அலைந்த சமயங்களில் எனக்கு கிடைத்த அல்லது நான் தெரிந்து கொண்டதாய் நினைக்கும் சில குறிப்புக்களை உங்களுக்கு கொடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் போன்றே கம்யூனிஸவாதியாக தவறாக கருத்தில் கொள்ளப்பட்டவர் செ, உண்மையில் செகுவாரா கம்யூனிஸ்டா என்றால் நிச்சயம் கிடையாது இதை அவரது மனைவியின் வார்த்தைகளிலும் இன்னும் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் இருந்துமே அறிந்து கொள்ளலாம். ஆனால் இங்குதான் நாம் செகுவாராவின் வாழ்க்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

கியூபா செகுவாராவின் சொந்தநாடு கிடையாது, அவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். அந்த நாட்டில் போராடிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேறு எந்தவிதத்திலும் உறவும் கிடையாது. ஆனால் தனது மிகப்பிரபலமான லத்தீன் அமேரிக்க பைக் பயணத்தில் அவர் கண்டுகொள்ளும் மக்களின் இன்னல்கள் செவின் மனதை பாதிக்கின்றது. மக்களுக்காக போராடுவதற்காக செகுவாரா களத்தில் இறங்குகிறார். இன்னுமொறு விஷயம், செகுவாரா இளம் பிராயத்திலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி.

இப்படி செகுவாரா தன்னுடைய போராட்டத்தை மக்களுக்காகத் தொடங்கியதால் தான், கியூபாவில் கிடைத்த வெற்றிப் பின்னர் கிடைத்த அரச உத்தியோகத்தை விடவும் மீண்டும் மக்கள் போராட்டத்தை உற்சாகமாய்த் தேர்ந்தெடுக்க உதவியது. கியூபாவின் விடுதலைப் போருக்குப் பின்னர், அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக இருந்து வந்த செகுவாராவிற்கும் முதலாவதான பிடல் காஸ்ட்ரோவுக்கும் சித்தாந்தந்தகளின் அடிப்படையில் சில கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தது. என்னதான் கம்யூனிஸ ரஷ்யாவின் உதவியால் மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் கியூபா இருந்தாலும். விடுதலைக்குப் பின் நேரடியாய் கியூபாவை கம்யூனிஸ நாடாக மாற்றுவதில் இருந்த பிரச்சனைகளை செகுவாரா உணர்ந்திருந்தார், மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து விட்டுத்தான் அவர்களை கம்யூனிஸ்ட்களாக மாற்றவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்துவந்தார்.

கியூபன் மிஸைல் கிரைஸில் எனப்படும், ரஷ்யாவின் அணுஆயத ஏவுகணைகள் கியூபாவில் கொண்டு வந்து வைத்திருந்து அமேரிக்காவை அலறடித்ததில் செகுவாராவின் பங்கு அபரிமிதமானது. ஒரு பேட்டியில் அந்த ஏவுகணைகளை இயக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்திருந்தால் (அவரிடம்) அந்த ஏவுகணைகள் அமேரிக்காவின் மீது நிச்சயமாய் வீசப்பட்டிருக்கும் என்று சொன்னவர் செ. அப்பொழுது மிகப்பிரபலமான ஒன்றாக பேசப்பட்டு வந்த மாவோயிஸத்தை (ரேபிட் இன்டஸ்டிரியலைஷேஷன்) கியூபாவில் நடைமுறைப்படுத்த நினைத்தார் செகுவாரா. ரஷ்யாவோ தங்களுடைய கம்யூனிஸ முறைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் காஸ்ட்ரோவை வற்புறுத்தினர். உண்மையில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையேயான பிரச்சனை கியூபாவிலும் செகுவாராவால் நீண்டது.

இந்தப் பிரச்சனையால் தான் செகுவாரா கியூபாவில் இருந்து வெளியேறி காங்கோவிற்கு சென்றாரர் என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கியூபாவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் சுகமாய்க் கழித்திருக்க முடியும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் செகுவாரா. (பாடிஸ்டாவின் ஆர்மி தவிர்த்த ஆட்களையும் கொன்றார் என்பதற்கான காரணங்கள் வேறுஉண்டு.)

ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி, போராளியாகி அதில் வெற்றியும் பெற்று, அந்த நாட்டின் இரண்டாம் பெரும் தலைவராகவும் இருந்தவருக்கு மீண்டும் போராளியாக மாற வேண்டிய கட்டாயம் நிச்சயம் இல்லைதான். அதையும் மீறி மக்களுக்குக்காக போராளியாக முடிவெடுத்து அந்த போராட்டத்திலேயே உயிரையும் மாய்த்துக் கொண்டவர் செகுவாரா. அதற்குப் பின்னால் இருந்த அமேரிக்க தலையீட்டை மறைக்க முடியாது. தனியாளாக (சிறிய கும்பலுடன்) அமேரிக்க ஆதரவு பொலிவிய ராணுவத்தை எதிர்த்து போராடும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது கியூப விடுதலைச் சரித்திரம். அதைப் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் நடந்தது இரண்டு இடங்களில் நடக்கவில்லை அவ்வளவே. ஆனால் இன்று பொலிவியாவின் ஆட்சியில் நடந்த மாற்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செகுவாரா விட்டுச்சென்ற கொரில்லா யுத்தத்தின் காரணத்தாலே.

இன்றும் கியூபாவை அடக்கிவிடத் துடிக்கும் அமேரிக்காவிற்கும், அது பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் செகுவாராவின் பேருக்கும் புகழுக்கும் முழுமையான தகுதியுடையவர் அவர்.


Credits, Vikatan.com, Tamiloviam.com.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

தாமதமாக வந்துசேரும் அறிவு

ஆனாலும் ஒருதுளி

துளியெனும் ஒரு சொல்லில்
அடங்காதெத் துளியும்
கடலெனும் ஒரு சொல்லில்
கண் விழிப்பதுண்டு பெருங்கடல்
இடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்
என்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்
காந்தமுள்ளில் அலைவுறும் திசைகள்
நடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்
வைத்து விளையாடும் சோதியின் மோனம்
படிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்
உறைந்த ஒரு வெற்றிடம்
பனியோ நிறம்மாறும் சூரியனோ என
யூகிக்க நீளும் இத்தவம்

என்றாலும் ஒற்றைத் துளியை
உச்சரித்துவிட முடியாமல்
ஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறது
உடல்கலம் எங்கும் சேமிக்கப்பட்ட
உயிர்த் தளும்பும் மொழி.

மழை பற்றிய செய்தி

மழை பற்றிய செய்தியைக் கேட்டுக் காத்திருந்தோம்
மழை வருகிறதென்ற செய்தி தாமதமாக
வந்த ஒரு நாளின் பின்
மழை வந்தது தாமதமாக
மழை பொழிந்ததின் வரலாறு
மரங்களில் உச்சிக் கிளைகளில்
செடி கொடிகளின் இலைகளில்
கிளைகளில் சற்றே கீழிறங்கி
வேர்களில் மண்ணில் என் உள்ளோடி
வளர்ந்தது வரலாற்றுப் பிரதிகளின் பக்கங்கள்
நீரான எழுத்துக்களால்
மழையைப்பற்றிய செய்திகள்
இவ்வளவுதான்
காரணம் வரலாறு என்பது என்றைக்கும்
தாமதமாக வந்துசேரும்
அறிவுதானே.

பாவனை

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
அசைவற்று மிதந்துகொண்டிருக்கும் நிலாவை
பொத்துக்கொண்டுத் துள்ளியது மீன்
நீருக்கு மேலே ஒரு கண வெட்டவெளி
கலங்கிய நிலா அதிர்வுகளடங்கி
தன்னைச் சரிசெய்து தணிவுகொண்ட
கால அளவில் தன்னை நீந்தி நிரம்பிய மீன்
ஐம்பது மீட்டர் நீளம் கொண்டதாய் மாறி
எனது தூண்டில் முள்ளில் சிக்கிப் புரண்டது
முள் தைத்த நீரின் பரப்போ ஒரு துளி ஆறு

இளம் விடியலில்தான் தெரிந்தது
மணலடர்ந்த ஆற்றில் மிதந்து அமிழ்ந்தது
நிலாவல்ல சிறு கூழாங்கல் என்பது
ஆனால் எனது ஐம்பது மீட்டர் நீள மீனை
ஊர்க்கூடி அதிசயித்ததே
அதுபோதும் எனக்கு.


இவைகள் ரமேஷ்-பிரேமின் பேரழகிகளின் தேசம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள். வெளியீடு மருதா. எனக்கென்னமோ இன்று படித்த இந்த நிலா கவிதை 'நீலவான ஆடைக்குள் முகமறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை' என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்தது.

அந்தக் கவிதை முழுவதுமே பாரதிதாசன் உவமைகளின் பின்னியிருப்பார்.
"வானச்சோலையிலே பூத்த தனிப்பூவோ"
"சொக்கவெள்ளிப் பாற்க்குடமோ"
"அமுத ஊற்றோ"
"காலை வந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ."

கல்லூரி படிக்கும் பொழுது எனக்கு தமிழாசிரியர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரதிதாசனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. கவிதை வரிகள் உரியவர்களுக்கே சொந்தமானவை. நன்றிகள் ரமேஷ்-பிரேம், மருதா.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி சுய சொறிதல்

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள்.

நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற - அவர்களை எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கும் இதையெல்லாம் கூட கவிதையாய் இப்படியெல்லாம் எழுதலாமா என்று :-)). அதனால் ஏஞ்சல் பயர் அறிமுகமாகி, அப்புறம் காப்பி பேஸ்ட் டெக்னாலஜிக்களை வைத்து முதன்முதலில் ஒரு இணையத்தளத்தை ஏஞ்சல் பயரில் தொடங்கினேன். பின்னர் ஜியோசிட்டியில் ஒன்று. பிறகுதான் கொஞ்சம் அளவாய் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று. கீதம்.நெட்டை கொஞ்ச காலம் வாட்டி வதைத்தேன்.

பின்னர் போதும் நீ கீதத்தில் கிழித்தது என்று நானே நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தான் காலச்சுவட்டில் ஜேபி சாணக்யாவின், ஆண்களின் படித்துறையை படித்து விட்டு, ஜேபி யை கூகுளில் தேட அது பிகேசிவக்குமாரின் வலைபதிவிற்கு சென்றது. இலக்கியத்தேடல் எனக்கு இருந்ததுன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே, வேற வழியேயில்லை. அங்கே போட்டேன் முதல் பின்னூட்டத்தை. ஆனால் அவர் அதை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அதனால அப்படியே விட்டுற்றதா, நான் யாருன்னு காண்பிக்காம விடறதில்லைன்னு மரத்தடிக்கு போனேன்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள் மரத்தடியில் ஓசி காஜி அடித்துவிட்டு, தொடங்கியது தான் என்னுடைய வலைத்தளம். (கேவிஆர், நடராசன், ஆசாத் பாய், மீரான் அண்ணாச்சி போன்றோர் இனிமேல் கதையெல்லாம் எழுதினே கையக்காலை உடைச்சிறுவேன் பயமுறுத்தியதால் தான் நான் மரத்தடியை விட்டு(அந்தப் பழம் புளிக்கும்) வலைத்தளம் தொடங்கினேன் என்பதெல்லாம் வதந்தி என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.)

அப்படியே தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்துவிட்டு பார்த்தால், பெரிய பெரிய விஷயமெல்லாம் நடத்துக்கிட்டு இருந்தது தமிழ்மணத்தில். சரி இதையும் ஒரு கை பார்ப்போமுன்னு களத்தில் குதித்தேன். இருக்கவே இருந்தது விகடன்.கொம். வெள்ளிக்கிழமை சுடச்சுட விகடனிலிருந்து மாவெடுத்து தோசையை நான் என் வலைபதிவில் சுட, பின்னூட்டம் வந்துச்சோ இல்லையோ கவுண்டரு எப்பப்பாரு ஆயிரம் பேரு வந்தாங்க வெள்ளிக்கிழமைன்னு சொல்லிக்கிட்டேயிருந்துச்சு.

சரி இப்படியே உட்டால் அப்புறம் சரி வராதுன்னு, நம்ம பழைய கதையை எல்லாம் விட்டேன் இதையும் யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அப்ப முடிவெடுத்தது வாத்தியாரோட பிரம்மாஸ்திரம், ஜல்லியடிக்கிறதுங்கிறதை. கொஞ்ச நாள் நானும் நல்லாத்தான் ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியா இவ்வளவு நாளா நான் புரொஜெக்டில் என்னத்த கிழிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட கம்பெனி, ஒட்டுமொத்தமா ப்ளாக்கரையே பேண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் மூடிக்கிட்டிருந்த நான் இப்பல்லாம் அதிகமா பொலம்பாம அப்பப்ப புலம்பிக்கிட்டிருக்கேன்.

நானும் கதையெழுதுகிறேன் பேர்வழியென்று எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் கூட என் கல்லூரியை மையமாக வைத்து ஒரு நாவல் மாதிரி எழுதுகிற ஐடியாவெல்லாம் உண்டு. (பைவ் பாய்ண்ட் சம்திங்கின் தாக்கம்) ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தது போல் கிடைக்கும் நேரம் குறைவாக இருப்பதால் அதை மறந்து விட்டேன். (எழுதினாலும் அச்சில் எல்லாம் இப்போதைக்கு கொண்டுவரமாட்டேன் பயப்படாதீர்கள். கல்யாணத்திற்கு வாங்கும் வரதட்சணையை வைத்து தமிழுக்கு என்னாலான உதவியை(அச்சில் கொண்டுவருவது) செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல எங்கம்மாவும் அக்காவும் இதற்கு உடன்பட வேண்டும் (கேவிஆர் - இங்கேயும் இழுத்துட்டேன்)) மற்றபடிக்கு தற்சமயம் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டும், சில விஷயங்களை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

நான் எழுதியவைகளில் தேவதையின் காதலன் என்ற சிறிய தொடர்கதை எனக்கு பிடித்தமானது. நான் பைவ் பாய்ண்ட் சம்திங் போல் ஒன்று எழுதினால் அது இந்தக் கதையின் விரிவாகத்தான் இருக்கும்.

Thanks: Tamiloviam.com

PS: நான் பிகேஎஸ் பதிவைப்பற்றி எழுதியிருந்ததற்கு பிகேஎஸ் தமிழோவியத்தில் பதிலளித்திருந்தார். பார்க்கவேண்டுமானால் மேலேயுள்ள லிங்கை கிளிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது,
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts