In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்

கருப்புப் பணம், யாழ்ப்பாணம், சிவாஜி

நானும் சிவாஜி பார்த்தேன், வெள்ளிக்கிழமை நான் எதிர்பார்த்திருந்ததைப் போலவே, அழகாக டிக்கெட் கிடைத்தது. காலை கொஞ்சம் வேலையிருந்ததாலும் வேலை சிவாஜியை விடவும் முக்கியமானதால் மதியம் தான் நேரம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை பாட்டி முகமாம் அதாவது அமாவாஸ்யாவிற்கு அடுத்த நாள். எனது வீட்டிலும் ஒரு முக்கியமான நிகழ்விற்கான கையொப்பம் போடத்தான் திருச்சி போயிருந்தேன், அம்மா நான் கிளம்பும் முதல் நாள் இந்த பாட்டிமுகம் விஷயத்தைச் சொல்லி திங்கட்கிழமையும் சேர்த்து லீவு போடவும் என்று சொல்லி நன்றாய்த் திட்டு வாங்கிக் கொண்டார்கள். கடைசியில் வெள்ளிக்கிழமை தான் கையெழுத்து போட்டேன், பாட்டிமுகமாய் இருந்ததால் எல்லா இடங்களிலுமே வேகமாகவே பேப்பர் நகர்ந்தது. சாதாரண நாட்களில் ஒரு நாள் ஆகும் வேலை அரைமணிநேரத்தில் முடிந்தது. நான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இனிமேல் இதுபோன்ற ஏதாவது காரியம் செய்வதாகயிருந்தால், பாட்டிமுகம் ராகுகாலத்தில் செய்துவிடலாம் என்று.

கையெழுத்து போட்டு முடித்ததுமே வண்டியைக் கட்டிக் கொண்டு சிவாஜி பார்க்கக் கிளம்பினேன், முற்காலமென்றால் அதாவது நான் படித்துக்கொண்டிருந்த பொழுதுகளில் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டுத்தான் போகமுடியும், பிற்காலங்களில் அதாவது சம்பாதிக்க ஆரம்பித்த நாட்களில் வளவளவென்று அரைமணிநேரம் பாட்டு வாங்கிவிட்டுத்தான் திரைப்படத்திற்குச் செல்லமுடியும். இப்பொழுதெல்லாம் அப்பா இதை கண்டுகொள்வதில்லை, ஒரளவு வயதுவந்த பிறகு சொந்தபுத்தியும் வரவேண்டும் என்று நினைத்திருக்கலாம் இல்லையென்றால் இது சொல்லியும் திருந்தாத ஜென்மம் என்று நினைத்து விட்டிருக்கலாம்.கொஞ்சம் அதிக டிக்கெட் விலை எதிர்பார்த்துத்தான் தியேட்டர் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் திருச்சியில், ரம்பா, கலையரங்கம், காவேரி என மூன்று தியேட்டர்களில் படம் ரிலீஸ், இதில் கலையரங்கம் ரொம்பவும் பெரியது ஆனால் டிடிஎஸ், ஏசி வசதி கிடையாது(நான் சமீபத்தில் போகவில்லை) காவேரியைப் பற்றி தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்ராயம் கிடையாது.(ஆம்பளைங்களை நிக்க வைச்சு முதல்ல பொண்ணுங்களுக்கு டிக்கெட் போடுவாங்க்ய). ஆனால் மூன்றிலும் காவேரிதான் சிறந்தது என்றாலும் தன்மானம் இடங்கொடுக்காமல் நழுவினேன். ரம்பாவில் ஏசியும் உண்டு, டிடிஎஸ்ஸும் உண்டு, பொதுவாக எல்லா ரஜினி படங்களும் இங்கேதான் ரிலீஸ் ஆகும், படையப்பாவும், பாபாவும் இங்கே பார்த்ததுதான்.(சந்திரமுகி - பெங்களூருவில்)

எனக்கு முந்தைய காட்சி பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம் அத்தனை சுரத்தில்லை, இங்கே பார்க்கக் காத்திருந்த மக்கள் பலரின் முகம் வாடத்தொடங்கியது. சப்தமே இல்லாமல் ரசிகர்கள் கலைந்ததும் நான் நினைத்தது தளபதி போல் ரஜினி இறந்துபோய்விடுகிறார் போல் என்றுதான். தியேட்டரில் முழு போலீஸ் பாதுகாப்பு இருந்தது, பச்சா பசங்க விஜய், அஜித் படத்திற்கே போலீஸ் சப்போர்ட் கேட்பார்கள் திருச்சியில் ரஜினி படத்திற்கு கேட்கவும் வேண்டுமா.

படத்தைப் பற்றி என்ன சொல்ல, நான் எதிர்பார்த்ததை விடவும் குறைவு தான். அதுவும் சண்டைக் காட்சிகளில் ரஜினிகாந்த் தெரியவேயில்லை என்பது வருத்தம். ஆனால் பாட்ஷா படத்தை முதல் முறை பார்த்த பொழுது அதன் சண்டைக்காட்சிகள் பிரம்மாதமாக இருப்பதாகப் பட்டது ஆனால் திரும்பவும் பார்த்தபொழுது அத்தனை நன்றாகயில்லை. மற்ற படங்களை ஒப்பிட சண்டைக்காட்சிகள் பிரம்மாதமாகவேயிருந்தது. ஆனால் தொடர்ச்சியான ஹாலிவுட் படங்களை பார்த்து அதனுடன் ஒப்பிட என்னமோ குறைவது போலவேயிருந்தது. இன்னும் ஒரு தடவை INOX யிலோ PVR யிலோ பார்க்கவேண்டும்.(இரண்டாவது முறை பார்த்த பொழுது எனக்கு பாபாவே பிடித்திருந்தது ;)).

காமெடி என்ற பெயரில் விவேக்கின் அளும்பு கொஞ்சம் ஓவர் தான், எல்லாமே பழைய காமெடிகள் தான், இளவஞ்சி சொல்லியிருந்ததைப் போல் இல்லாமல் எனக்கு இந்தப் படத்தில் அவ்வளவு தூரம் சிரிப்பதற்கு எதுவுமே தென்படவில்லை. பழகபழக எனக்கு சகிக்ககலை. ஒட்டுமொத்தத்தில் இடைவேளைக்கு முன்புவரை என்னை சீட்டில் அழுத்தி உட்கார வைத்திருந்தேன் என்றுதான் சொல்லணும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிக்கிறது. Cardiopulmonary resuscitation(CPR) எவ்வளவு நேரம் வரைக்கும் கொடுக்கமுடியும் என்பது போன்ற கேள்விகள் எல்லாம் தொக்கி நிற்கின்றன, லாஜிக்கல் ஓட்டைக்காக இல்லையென்றாலும் படத்தின் முக்கியமான திருப்பம் என்று சொல்வதால்.

டிசே தமிழன் ஒரு பதிவெழுதியிருந்தார், சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வென்று; இவர்கள் ரஜினியின் படத்தில் ஷ்ரேயா போன்றவர்களுக்கு வேறென்ன மாதிரியான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் தெரியவில்லை. தமிழ்ப்பண்பாடுப் பெண் என்பது போன்ற கற்பனைகள் கலியாணம் ஆகாத எல்லோரிடமும் இருக்கும் என்று நினைக்கிறேன்(இது என்னை வைத்து) ஓரளவிற்கு இதை இயக்குநர் சரியாகப் பிடித்திருப்பதாகவே நினைக்கிறேன். அதுவும் வெளிநாடு போய் வேலைபார்த்துவிட்டு வந்த என்னுடைய அத்தனை நண்பர்களும் உறவினர்களும் இதே வார்த்தையைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு ஜீன்ஸ் போட்டு, டிஸ்கோத்தே சென்று, பியர் அடிக்கும் பெண்களைப்(இல்லை இதில் ஏதோ ஒன்றை செய்யும் பெண்ணை) பிடிக்காமல் போவதற்கான உளவியல் காரணங்களை யாராவது PhD செய்யலாம்.

வசனத்தின் கடைசியில் வருவதைப் போல் தமிழ்ப்பண்பாட்டு பெண்கள் லெமூரியாவுடன் தொலைந்து போய்விட்டதாகவும் வேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்று வருவதைப் போல, தமிழ்ப்பண்பாட்டுப் பெண்கள் யாழில் கிடைப்பார்கள் என்றால் ஒரு முறை தேடுதல் வேட்டையை அங்கேயும் நடாத்தலாம்.(இந்த குறிப்பு எங்க வீட்டிற்கு - யாழ்த் தமிழர்கள் உதைக்காமல் இருந்தால் சரிதான்.) மற்றபடிக்கு பில்டிங் போர்டிகோ என்று வரும் இரட்டை அர்த்த வசனங்களும், "பில்லா ரங்கா பாட்ஷா தான் இவன் 'பிஸ்டல்' பேசும் பேஷாதான்" போன்ற இரட்டை அர்த்த பாடல் வரிகளும் பாய்ஸை ஒப்பிடும் பொழுது குறைவுத்தான் என்றாலும் இல்லாமல் இல்லை. வசனம் சுஜாதா - ஷங்கராம், தாத்தா பேஷா தப்பிச்சிட்டார்.

கருப்புப்பணத்தைப் பற்றி பேசவாவது செய்கிறார்களே, சமீபத்தில் வீடு வாங்க அலைந்த பொழுது தான் எத்தனை தூரம் இதன் ஆழம் இறங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கடைசியில் வீடு வாங்க இருந்த மற்ற கிரைட்டீரியாக்கல் இல்லாமல் போய் எல்லாம் ஒய்ட்டில் வாங்கிக் கொள்ளும் ஓனர்களைத் தேடி அலைந்தது நினைவில் வந்து கொண்டேயிருந்தது; படம் பார்க்கும் பொழுதெல்லாம். 32,00,000 கோடி ரூபாய்கள் கருப்புப் பணம் இந்தியாவில் இருப்பது உண்மையானால், ஆபீஸ் ரூம் / மற்றும் ஏனைய ஷங்கரின் உத்திகள் இல்லாமல் அவற்றை வெள்ளையாக்க யாராவது முயலவேண்டும்.(சிதம்பரம் கூட எதையோ செய்து கொஞ்சம் போல் வெள்ளையாக்கியது நினைவில் உண்டு.) ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களிடம் உங்களுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிப்பாருங்கள், சீட்டிங், கருப்புப் பணம், கவர்மெண்டை ஏமாற்றுவது சர்வசாதாரணமாக பேசப்படும்.

வீடு வாங்க நினைத்த பொழுது; வீட்டை 10,00,000(10 லட்சம்)த்திற்கு கீழ் ரிஜிஸ்டர் செய்தால் டாக்ஸ் பிரச்சனையில்லை(யோ அதைப் போல ஏதோ ஒன்று) என்பதால் 20,00,000 - 40,00,000 வரை பொருமானமுள்ள வீட்டை இவர்கள் 10,00,000 க்கு ரெஜிஸ்டர் செய்துவிட்டு மற்றதை கொஞ்சம் கூட முகம் சுருக்காமல் ப்ளாக்கில் கொடுத்திருங்க என்று சொல்கிறார்கள். அந்தப் 10,00,000(பத்து லட்சத்திற்கு) பேங்க் கொடுக்கும் 85% போக மீதிப் பணத்திற்கே அவனைப் பிடி இவனைப் பிடி என்று இருக்கிறவர்கள் மத்தியில் - 20,00,000 - 30,00,000 யாரிடம் இருக்கிறது ப்ளாக்காக, கொள்ளை தான் அடிக்கணும் எதாவது பேங்கைப் பார்த்து. இவர்கள் யாரும் அரசியல்வாதிகள் கிடையாது, கொஞ்சம் அடியாள் பலம் எல்லாம் கிடையாது சாதாரண மக்கள் தான் அவர்களும். இப்பொழுது நான் வாங்கிய வீட்டையும் விற்பதென்றால் இப்படித்தான் முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் படத்தில் சொல்லியிருப்பதைப் போல் கருப்பை வெள்ளையாக ஆக்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!!! எனக்கு அதிலும் லாஜிக்கலாக நிறைய கேள்விகள் உண்டு.

படம் பார்த்து முடித்ததும் எனக்குத் தோன்றியது ஷங்கருக்கான ஹீரோ ரஜினி கிடையாது ரஜினிக்கான டைரெக்டர் ஷங்கர் கிடையாதென்று. ஆனால் சிவாஜி படம் மற்றபடங்களுடன் ஒப்பிடும் பொழுது நன்றாகவேயிருக்கிறது. கமல் படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரஜினி படத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும் பொழுது வித்தியாசமாகயிருக்கும். இடைவேளைக்குப் பிறகான படத்தின் எண்டர்டெயின்மெண்டிற்கு நான் கியாரண்டி. நிச்சயமாக ஒரு முறை பார்க்கக்கூடிய படம் தான் சிவாஜி.

Related Articles

5 comments:

 1. யோவ் தாஸு,

  // இளவஞ்சி சொல்லியிருந்ததைப் போல் இல்லாமல் எனக்கு இந்தப் படத்தில் அவ்வளவு தூரம் சிரிப்பதற்கு எதுவுமே தென்படவில்லை //

  ரஜினியின் காமெடியை ரசிக்கறதுக்கெல்லாம் கள்ளம் கபடமற்ற, சூதுவாதற்ற, குழந்தைத்தனத்தை ஒத்த, தெளிவான, வெள்ளையான, வெள்ளந்தியான உள்ளம் வேண்டுமையா!!! அதெல்லாம் போக்கத்த ஃபிகரான கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் பாரிஸ் ஹில்டனின் கொளுகை பரப்பு செயலாளருக்கு (அண்ணாச்சி: நன்றி! )அமையறது குஷ்டம்... த..த.. அது.. கஷ்டமப்பா!

  இது போக, வெள்ளைக்காரிகளின் அழகுகளை நாளைக்கு நாலு பதிவுகளாக போட்டு சிலாகிக்கும் நீர்...

  தங்கத்தாரகை ஸ்ரேயாவின் அழகைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட சிலாகித்துச்சொல்லாமல் விட்டதன் பிண்ணனியில்....

  இன்னமும் உம்மைவிட்டுப்போகாத வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தினால் வந்த அடிமைத்தனமும், பரங்கிகளின் அழகை மட்டுமே அடிவருடுவதன் மூலம் நீர் நிறுவ முயற்சிக்கும் அயல்நாட்டு மோகமும் வெள்ளிடை மலையென தெளிவாகத் தெரிகிறது!!!

  கொஞ்சம் பொறுமைய்யா... அடுத்த படத்துக்கு எப்படியும் ஜெஸ்ஸிகா ஆல்பா தான் ஹீரோயின்! அப்போது நீர் வண்ண வண்ண புகைப்படங்களுடன் ரஜினி&ஆல்பா ஜோடியின் பதிவுகளாக போட்டு ஜல்லிகளால் தமிழ்மணத்தை நிரப்பும் காட்சி என் மனக்கண்ணில் தெரிகிறது!!

  ஹிஹி...

  ReplyDelete
 2. கிழிஞ்சது கிருஷ்ணகிரி... ஹிஹி

  ReplyDelete
 3. "யாழ்ப்பாணத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்று வருவதைப் போல, தமிழ்ப்பண்பாட்டுப் பெண்கள் யாழில் கிடைப்பார்கள் என்றால் ஒரு முறை தேடுதல் வேட்டையை அங்கேயும் நடாத்தலாம"
  காலம் கடந்துவிட்டது , யாழ்ப்பாணமும்
  அப்படித்தான்.

  ReplyDelete
 4. though one side u all
  cry ,and bark at the sun
  superstar the movie has
  made records and records
  ..keeping shouting like
  frogs in wel.....thanks for
  speaking more about our
  boss than us....
  rajini veriyan

  ReplyDelete
 5. இளவஞ்சி,

  //போக்கத்த ஃபிகரான//

  வன்மையாகக் கண்டிக்கிறேன் உம்மை

  //தங்கத்தாரகை ஸ்ரேயாவின் அழகைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட சிலாகித்துச்சொல்லாமல்//

  வன்மையாகக் கண்டிக்கிறேன் மோகனாவை

  //அயல்நாட்டு மோகமும் வெள்ளிடை மலையென தெளிவாகத் தெரிகிறது!!!//

  ச்பாஷ்!! வெள்ளைத்தோல் இவருக்குப் பிடிக்கும்னுதான் சிவாஜியே ஸ்பெஷலா வெள்ளைத்தோல்மாத்தி நடிச்சும் இவருக்குப் புடிக்கலையாமே?

  //ரஜினி&ஆல்பா ஜோடியின் பதிவுகளாக போட்டு ஜல்லிகளால் தமிழ்மணத்தை நிரப்பும் காட்சி என் மனக்கண்ணில் தெரிகிறது!!//

  அதெல்லாம் இல்லாமலேயே மோகனா ஜல்லியால நிரப்ப மாட்டாரா என்ன?

  ஜல்லிகள் இங்கே மொத்தமாக மட்டும் விற்கப்படும் :-)

  சாத்தான்குளத்தான்

  ReplyDelete

Popular Posts