In சினிமா

John Rambo - படம் ஒரு பார்வை

வெள்ளிக்கிழமை இரவு John Rambo படத்திற்குச் சென்றிருந்தேன். என் காலத்தில் இல்லாமல் கொஞ்சம் முன் வெளியானவை Ramboவின் மற்ற வரிசைப் படங்கள் பார்த்தவன் என்ற முறையில் இந்தப் படத்திற்கும் செல்ல முடிவெடுத்திருந்தேன். Inox cinemas இணையதளம் எப்பொழுது ஆரம்பித்தார்கள் என்று தெரியாது ஆனால் சமீபத்தில் தான் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் தியேட்டர் என்றாலும் கருடா மாலில் இருக்கும் Inox தியேட்டருக்குச் செல்லாமல் இருந்ததற்கு ஒரே காரணம் இன்டர்நெட்டில் டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது தான். பெங்களூரில் பார்த்த பெரும்பான்மையான படங்கள் Forum இல் PVR cinemasல் பார்த்ததாகத்தான் இருக்கும்.
 
ராம்போ வரிசையில் ஆக்ஷன் பட ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் இருக்கிறது. வன்முறையை விரும்பாதவர்கள் ராம்போ படங்களுக்குப் போகாமல் இருப்பது தான் ஒரே தீர்வு என்பதால் இதில் இருக்கும் வன்முறையைப் பற்றி பெரும் பிரச்சனையில்லை. இன்னமுமே கூட இதைவிடவும் City of God படம் வன்முறை அதிகம் கொண்டது என்று சொல்வேன். அபோகலிப்டா அளவிற்கு சொல்ல முடியாவிட்டாலும். காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
 
மியான்மாரில் நடக்கும் எதைப்பற்றியும் படம் பேசவில்லையென்றும் படம் கற்பனைக்கதை என்றும் சொல்வதை நாம் நம்புவதும் நம்பாததும் நம்விருப்பம். அறுபது வருடங்களாக சிவில் வார் நடந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்று மியான்மாரைப் பற்றிய வரிகளும் மனிதர்களை விவசாய மண்ணில் கண்ணிவெடிகளுக்கு நடுவில் பந்தயம் வைத்து விளையாடுவதும் மனதை வருத்தப்படத்தான் செய்தது.
 
தாய்லாந்தில் ஸில்வெஸ்டர் ஸ்டலோன் கோப்ரா பாம்புகளைப் பிடிப்பதில் தொடங்கும் படம், மியான்மரைப் பற்றிய கொடுமைகளைக் காட்டிக் கொண்டே மெல்ல நகரத்தொடங்குகிறது. ஒரு கிறிஸ்துவ மிஷனரி அவரை அணுகி தங்களை மியான்மாரில் இருக்கும் ஒரு ரெபெல் க்ரூப் இருக்குமிடத்திற்கு சென்று சேர்க்குமாறும் அவர்களுக்கான மருத்துவ உணவு வசதிகளுடன் தாங்கள் வந்திருப்பதாகவும் சொல்ல படம் பயணிக்கிறது. ஸ்டலோன் முதலில் மறுத்து பின்னர் ஒப்புக்கொண்ட பிறகும் அவர் உங்களால் எதையும் மாற்றிவிட முடியாது என்று சொல்லி அவர்களை அழைத்துச் செல்கிறார். இந்த இடங்களில் எல்லா இயற்கைக் காட்சிகளை படமாக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது ஆனால் சட்டென்று ஸ்டலோன் துப்பாக்கியை எடுத்து இடையில் வம்பிழுக்கும் பர்மீஸ் மக்களைக் கொல்ல படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது, அப்பொழுது "No life should be taken for any reason."  என்று கிறிஸ்துவ மிஷினரில் வரும் ஒரு நபர் சொல்லும் பொழுதே படத்தின் கடைசியில் அவர் ஒருவரை கொல்லும் படி வரும் என்று நினைத்தேன் சரியாக வருகிறது.
 


ராணுவம் இருக்கும் இடங்களில் இருக்கும் வன்முறை, சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு அழைத்துச் செல்வது, பெண்களைக் கொடுமைப்படுத்துவது சிறுவர்களை ராணுவத்துக்கு என்று அழைத்துச் செல்வது என்று தொடர்ச்சியாக அத்தனையையும் பதிவு செய்கிறது படம். ஸில்வெஸ்டர் ஸ்டலோன் படத்தின் சில காட்சிகளில் மெல்லிய நகைச்சுவையைக் காட்டியிருந்தாலும் ஆனால் அது தொடராமல் விடப்பட்டிருக்கிறது. அதுவும் சரிதான்.

கடைசியில் வயிற்றைக் கிழித்து ஒருவரை தள்ளிவிடும் காட்சியைத் தவிர்த்து பெரிய அளவில் கிராபிக்ஸ் செய்தது போல் இல்லை. அதாவது படத்தில் அதைத் தவிர்த்து கிராபிக்ஸ் செய்திருப்பது போல் இல்லை. ஒளிப்பதிவும் சரி RRவும் சரி சட்டென்று விரிந்து செல்லும் படத்தை தொந்தரவு செய்யாமல் பயணிப்பது நமக்கும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறது. ஸ்டலோன் பிரம்மாண்டமாய் இருக்கிறார் படத்தில் அவர் முகத்திற்கு க்ளோசப் போட்டால் திரை முழுவதும் அவர் மட்டுமே இருக்கிறார். படம் எதுவும் மெஸேஜ் சொல்லுதா என்றால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஆனாலும் மியான்மரின் கதை தான் நமக்குத் தெரிந்தது தானே.
 
படத்தைப் பார்க்க சிபாரிசு செய்யும் அதே நேரத்தில் அதிக வன்முறைக் காட்சிகளைக் கொண்ட படம் என்ற டிஸ்க்ளெய்ம்பரையும் போட்டு விடுகிறேன். ராம்போ படங்களில் வேறெதையும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றாலும் ஏதோ என்னால் முடிந்தது.

Related Articles

6 comments:

 1. அன்பரே,

  இன்று 'ரேம்போ' படத்தைப் பார்க்க போகலாமா என்று நண்பர் அழத்தார். போக முடியவில்லை...பார்க்கும் நாளை தள்ளிவைத்திருக்கிறோம்.

  படத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 2. \\ராம்போ படங்களில் வேறெதையும் எதிர்பார்க்க மாட்டீர்கள் \\

  அதே..அதே..பார்த்துவிடுகிறேன்...;)

  ReplyDelete
 3. மோஹன்,

  ராம்போ படம் வாயிலாக ஏகதிபத்தியங்கள் ஏற்படுத்தும் மாயை கட்டுடைப்பீர்கள் என்று பார்த்தால் இப்படி சொல்லிவிட்டீர்களே!

  அது சரி திரைப்படத்தில் உள்ளார்ந்த நோக்கம் என்ன இருந்தால் என்ன, திரைப்படம் என்றளவில் பார்ப்போம் என்ற நியதியின் கீழ் நீங்கள் சொல்வது சரியே!

  பழைய ராம்போ படங்களை நீங்கள் பார்த்தவராக தான் இருப்பீர்கள், அப்பொது ராம்போ ரஷ்ய சக்திகளுக்கு எதிராக அமெரிக்க சக்திகளுக்கு மாரல் பூஸ்ட் அளித்தார் :-))

  முந்தைய ராம்போ படங்களில்,

  ஆப்கான் வாரில் ரஷ்ய சக்திகள் எதிராக அமெரிக்க சக்திகளின் ஒரு பிரதியாக , ஆப்கானிய மக்கள், புரட்சிப்படைகளின் சார்பாகவே ராம்போ சண்டைப்போட்டார்(அந்த ஆப்கானிய சக்திகள் என்பது ஒசாமவையுமும் உள்ளடக்கியது என்பதை அந்த உண்மைப்போர் வரலாறு சொல்லும்)பின்னாளில் எப்படி அந்த கதை மாறியது என்பதும் அறிவீர்கள்!

  இப்போது பர்மா மீது கண் வைத்துள்ளார்கள்!

  உண்மையில் பர்மாவில் மக்களாட்சி கேள்விக்குரியது என்றப்போதிலும் அமெரிக்கப்பார்வையில் சொல்லப்படுவது போல அத்தனை மோசம் இல்லை!

  அமெரிக்காவின் சக்தியைக்காட்ட இப்போது படம் விட்டுள்ளார்கள் , கூடிய விரைவில் அவர்களே களத்தில் குதிப்பார்களாக இருக்கும் :-))

  tears of the sun என்ற ஆங்கிலப்படத்தில் ஆப்ரிக்க விடுதலைப்போரை ஒரு தலைப்பட்சமாக காட்டியது போலத்தான் இதுவும் இருக்கும் என்றே நினைக்கிறேன்!

  ReplyDelete
 4. ஹாஹா வவ்வால் பிறகு நான் வெறும் மைக்கேல் மூரின் படங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

  //ஆப்கான் வாரில் ரஷ்ய சக்திகள் எதிராக அமெரிக்க சக்திகளின் ஒரு பிரதியாக , ஆப்கானிய மக்கள், புரட்சிப்படைகளின் சார்பாகவே ராம்போ சண்டைப்போட்டார்(அந்த ஆப்கானிய சக்திகள் என்பது ஒசாமவையுமும் உள்ளடக்கியது என்பதை அந்த உண்மைப்போர் வரலாறு சொல்லும்)பின்னாளில் எப்படி அந்த கதை மாறியது என்பதும் அறிவீர்கள்! //

  ஆப்கனில் முதலில் ரஷ்யா செய்தது சரி கிடையாது! பின்னர் அமேரிக்கா செய்தது! முதலாவதற்கு தீர்வு அமேரிக்கா தந்தது இரண்டாவதற்கு தீர்வு பின்லேடன் வகையறா கொடுத்துக் கொண்டிருப்பது.(நான் பின்லேடன் செய்வது சரியென்று சொல்லவில்லை).

  இத்தனை நாள் மியான்மர் விஷயத்தில் பெரியண்ணன் வராமல் இருப்பதற்கு உள்ளூர் பெரியண்ணன் இந்தியா தான் காரணமாகயிருக்க வேண்டும்.

  நான் மியான்மரில் நடப்பது சரியென்று சொல்லவில்லை. ஆனால் அமேரிக்கா அங்கே கால் வைத்தால் தடுக்க ஆள் கிடையாது, இன்னும் அமேரிக்க பெரியண்ணனுக்கு எதிரி நாடு ஒன்று அதிகமாகுமாயிருக்கும்.

  ஒரு சந்தேகம் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா சப்போர்ட்டோ?(தெரியாமல் கேட்கிறேன்.)

  ReplyDelete
 5. நானும் ஒருவழியாக பார்த்து விட்டேன்.

  எடுத்த உடனே பர்மாவைக் குறிப்பிடுவது இல்லை என்று போட்ட உடனே மாப்ளை இது பர்மாவைப் பத்தின படம்தான் என்று எளிதில் ஊகிக்க முடிந்தது.

  இந்தப் படத்தில் சந்தோஷப்படும்படியான ஒரு விஷ்யம் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் அமெரிக்கவால் மட்டுமே தீர்வு காண முடியும் என்ற ரீதியில் ஒரு காட்சியைக் கூட காட்டாததுதான். ஆனால் படம் முழுக்க ஹீரோயிசம் நிரம்பியுள்ளது. ஒரு மசால படத்தைப் பார்த்த திருப்திதான் எனக்கு ஏற்பட்டது. பிரமிப்பு ஏற்பட வில்லை.

  அதே போன்று Tears of the sun படம் அவ்வப் போது நினைவுக்கு வருவதைத் தடுக்க முடிய வில்லை. அதே போல க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் அழகாய் எடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 6. //இத்தனை நாள் மியான்மர் விஷயத்தில் பெரியண்ணன் வராமல் இருப்பதற்கு உள்ளூர் பெரியண்ணன் இந்தியா தான் காரணமாகயிருக்க வேண்டும்.//

  உள்ளூர் பெரியண்ணன் == China, no doubt about it.

  ReplyDelete

Popular Posts