In புத்தகங்கள்

நித்ய கன்னி

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்திருந்த எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவலைப் புரட்டிப் பார்த்த பொழுது ஜே.பி சாணக்யாவும் தி.ஜாவும் எழுதியிருந்த முன்னுரை பிடித்திருந்ததால் வாங்கிவந்திருந்தேன். பெரும்பாலும் இதைச் செய்ய மாட்டேன், புத்தகத்தின் முன்னுரையானாலும் காசு கொடுத்து வாங்கிவிட்டுத்தான் படிப்பது முறை என்று நினைப்பேன். ஆனால் அப்படியும் வாங்கிவிட்டதால் பெரிய அரிப்பு இல்லை. நாவல் மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான மாதவியை அச்சாகக் கொண்டு சுழல்கிறது. மகாபாரதத்தில் ஐந்து ஆறு பக்கங்கள் நீளும் மாதவியின் கதையை விரித்து நாவலாய் எழுதியதாக எம்.வி.வி தன் 'தம்மைப் பற்றி'யில் சொல்கிறார்.

மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.

மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,


மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.

காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.

மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.

மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.

காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.

அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.

அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.

கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.

மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.

மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.

"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."

என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.

"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"

மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.

மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.

"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.

அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?

மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.

மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!

காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.

"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"

இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.

PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.

Related Articles

6 comments:

 1. சத்தியமா உங்ககிட்ட இருந்து இந்த விஷயத்துல அதுவும் இவ்வளவு நேர்மையா ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கலை.

  உண்மையில் படிக்கத் தூண்டுகின்ற வரிகள் பலவற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். (புக்கை எப்போ கூரியர் பண்றீங்க. ஏற்கனவே ரெண்டு மூணு பெண்டிங்ல இருக்கு. :) )

  ReplyDelete
 2. ஹாஹா நந்தா என்னைக் கொடுமைக்காரனாவே கற்பனை செய்து வைச்சிருக்கீங்க போலிருக்கே!

  //புக்கை எப்போ கூரியர் பண்றீங்க. ஏற்கனவே ரெண்டு மூணு பெண்டிங்ல இருக்கு. :)//

  ம்ம்ம் அனுப்புறேன் அனுப்புறேன் :)

  ReplyDelete
 3. தம்பீபீபீபீபீபீபீபீபீ

  புத்தகத்தை படிக்கத் தூண்டும் விமர்சனம்..

  அப்படியே இன்னொரு புத்தகத்தையும் வாங்கி எனக்கு அனுப்பிரு..

  ReplyDelete
 4. உண்மைத் தமிழன், நன்றி.

  புக் அனுப்பனும் தானே அனுப்பிட்டா போச்சுது!

  ReplyDelete
 5. படிக்கத்தூண்டும் விமர்சனம்.

  ReplyDelete
 6. அரைபிளேடு நன்றி.

  உங்களுக்கு அப்ப புக் வேணாமா?

  ReplyDelete

Popular Posts