In நாட்குறிப்பு

மாற்றம் மாறாமை பற்றிய சில குறிப்புகள்


பனிக்காலத்தின் கடைசி இரவுகளை முனிர்காவின் சாலைகள் வேகமாக நகர்த்திக் கொண்டிருந்தன. முனிர்காவின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் இரண்டு மூன்று கிலோமீட்டர் குறுக்குப்பாதையில் நினைவின் பதிந்திருந்த நினைவுகளை மீளப்பொருத்தி நகர்ந்த பொழுது அவ்வீதிகளில் பெரிய மாற்றமில்லை, ஒன்றிரண்டு இடங்களில் இடித்துவிட்டு புதிதாய் இன்னும் சிக்கலாய் வீடுகள் கட்டிக் கொண்டிருந்ததை தவிர்த்து. நான் லஸ்ஸி வாங்கிக் குடித்த கடையும், சலவைக்கு துணிகள் கொடுத்த இடமும், நபரும், அவரது மனைவியும் குழந்தைகளும்(நான் பார்த்த குழந்தை பெரியவன் ஆகியிருக்கலாம் நான் பார்த்த அதே வயதில் அளவில் இன்னொன்று உருவாக்கப்பட்டிருந்தது) மின்சாரம் இல்லாத அவரது வீடும் பகலிலும் எரியும் சிம்னி விளக்கும் அப்படியே இருந்தன. என்னை விடவும் வெகு சுலபமாய் அவர் நினைவில் நான் மீண்டு வந்திருந்தேன். சிறு உரையாடலுக்குப் பிறகான லஸ்ஸி கடைக்காரரின் சந்திப்பும் அப்படியே! கடை கொஞ்சம் விஸ்தாரமாக்கப்பட்டிருந்தது முன்னைக்கு இப்பொழுது அதிகம் இனிப்பு வகைகள் விற்றுக் கொண்டிருந்தார். முனிர்காவின் வீதியில் ஆம்லெட் போடுபவரும் கூட அப்படியே ஆம்லெட் ஒன்றின் விலை மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது முன்பு சிங்கிள் ஆம்லெட் ஐந்து ரூபாய் இப்பொழுது ஆறு ரூபாய் டபுள் ஆம்லெட் அப்படியே டபுளாய். நான்கு வருடங்கள் முன்பு உங்களைப் பார்த்திருக்கிறேன் அவரே தான நீங்க என்ற கேள்விக்கு, எட்டு வருஷமா இங்கத்தான் கடை நடத்துகிறேன் என்ற பதில் மட்டுமல்லாமல், இந்த இடத்தை விட்டுக்கூட நான் மாறியதில்லை என்ற பதிலில் அவருக்கு இருந்த பெருமை எனக்கு ஆச்சர்யமளிப்பதாகயிருந்தது.
 
வெகு காலத்திற்கு முன் குமுதம்/ஆனந்த விகடன் தெரியாது படித்தக் கதை ஒன்று நினைவில் வருகிறது. மதுரையில் இரவில் நடக்கும் கதை, இட்லி சுட்டு விற்கும் கிழவியொருத்தியை போலீஸ்காரர் இடத்தைக் காலி செய்து கொண்டு கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருப்பார், பாட்டி, இல்லை நான் இருப்பேன் என்று நம்பி என்னைத் தேடி இங்கே ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு கொடுத்துவிட்டுத்தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவர் தான் நான் சந்தித்த ஆம்லெட்காரரும், அவரிடம் நான் மாற்றத்தைப் பற்றியும் நீங்கள் எட்டாண்டாக மாறாமல் இருப்பதைப் பற்றியும் எப்படிப் பேசுவது. நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமமகவும் இருக்கும் ஒன்று அவருக்கு பெருமைக்கூரியதாய் இருக்கிறது. தொடர்ச்சியாய் சந்தித்த டெல்லி மொத்தமுமே எனக்கு பெரிய வித்தியாசமாக ஆனதாக எதுவும் புலப்படவேயில்லை. கதிர்வேல் இட்லிகடை, சந்திற்குள் இருக்கும் இண்டர்நெட் கடை, எப்பொழுதும் முடிவெட்டும் சலூன் கடை, மழுக்க மழுக்க ஷேவ் செய்து குங்குமம் வைத்திருக்கும் அதே சிகை திருத்துபவர் முகம் என எல்லாம் அப்படியே. மென்பொருள் பணி என்னிடம் கொண்டு வந்த எந்த மாற்றத்தையும் சமூகத்திற்கு கொண்டு வந்துவிடவில்லை என்றே நினைத்தேன் நான். ஒருவேளை நான் என்னிடம் காணும் மாற்றம் கூட காட்சிப் பிழையாக இருக்குமோ என்று நினைத்தேன். பைக்குள் கனத்த காமெராவும், பர்ஸிற்குள் கனத்த டெபிட்/கிரெடிட் கார்டுகளும், பார்க்கும் எல்லார் மீதான 'நம்மை ஏமாற்றிவிடுவார்களோ' என்ற பயமும் புதுசு. மாற்றம். மென்பொருள்துறை தந்தது.
 
"மாற்றம் என்பது மாறாத் தத்துவம், மாறும் உலகின் மகத்துவம் அறிவேன், கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" கண்ணதாசனின் வரிகளைச் சொல்லிவிட்டு எனக்கான மாறுதல்களுக்கான வக்காலத்து வாங்கலாம். அதே போல் மிகநிச்சயமாக மாற்றம் என்பது உலக நியதி. ஆனால் உலகம் ஒப்புக்கொள்ளாத நியதி, எல்லோரும் வாக்குவாதத்தின் பொழுது உபயோகிக்கும் நியதி, ஆனால் அதை உபயோகிப்பவர்களே கூட ஒப்புக்கொள்ளாத நியதி. "அமேரிக்கா" சென்று வந்தாலோ, கல்யாணம் செய்து கொண்டு மனைவி வந்தாலோ, புதிதாய் ஒரு ஊரில் மொழி பழக்கவழக்கம் கலாச்சாரம் கற்று வந்தாலோ மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் இயல்பாய் வரக்கூடியது; அது உலக நியதி. ஆனால் அந்த மாற்றம் உலகம் ஒப்புக்கொள்ளாதது அமேரிக்கா போய்விட்டு வந்தும் இவன் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறான் என்பது தான் பெருமைக்குரிய வாசகமாகயிருக்கிறது அதே போல் தான் மனைவி சொல்பேச்சு கேட்டு ஆடுவதும், மென்டடலிட்டி மாற்றப்படுவதும் இவை உலக நியதிகள் ஆனால் உலகம் ஒப்புக்கொள்ள முடியாத நியதிகள். புத்தகம் படிப்பதால் உனக்கு என்ன ஆகிறது, உலக சினிமா பார்ப்பதில் நீ என்னவாக ஆகிறாய், அதைப்பற்றி நாலுவரி விமர்சனம் எழுதி என்னத்தை கிழித்துவிடுகிறாய் உனக்கு மாசம் பொறந்தால் சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு நேர்மையாயிருக்கிறாயா என்ற கேள்விகள் தாண்டியும் மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 
சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுக்கூடிய வலிகள் காரணமாய் மாறிவிடக்கூடாதே என்ற பயத்துடனேயே வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. நாத்தீகம் போல் கடவுள் மறுப்பு போல் பெண்களின் மீதான சில "குறிப்பிட்ட" எண்ணங்களைப் போல். ஆனால் private, protected, public என்று அக்ஸஸ் மாடிஃபயர் வைத்து இது மாறலாம் இது மாறவே கூடாது, இந்த மாற்றம் என்னிலிருந்து உண்டானால் மாறலாம் என்று வரைமுறைப்படுத்த வாழ்க்கை என்பது ஜாவா ப்ரொக்கிராம் அல்லவே. ஆனால் வாழ்க்கை ஜாவா ப்ரொக்கிராமாக இருந்தால் எவ்வளவு நல்லதாகயிருக்கும், CR(Change Request) நம்பர் போட்டுவிட்டு மாற்றத்தை எழுதிவிட்டு மறந்து போய்விடலாம். மாற்றத்திற்கு முன்பான பின்பான மாற்றங்களைப் பற்றி எல்லா லெவல்களிலும் டெஸ்டிங் செய்து மாற்றம் செய்யத்தக்கதா இல்லையா என்று கண்டுபிடித்து நகர்ந்துகொண்டேயிருக்கலாம். அடுத்த CR ஐ நோக்கி. ம்ஹும் ஆனால் வாழ்க்கை ஜாவா ப்ரொக்கிராம் அல்லவே. எத்தனையோ காரணங்களுக்காக நிராகரித்துவிட்டுச் சென்ற எத்தனையோ வலைப்பதிவுகள் பின்நாட்களின் ஏற்படுத்திய தாக்கம், இதை முன்னாளில் இருந்தே படித்திருக்கலாம் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தாலும் நிராகரித்துச் சென்றுவிட்ட பதிவுகளில் இப்படித் திரும்பிப் பார்க்கவைத்த பதிவுகளின் சதவீதம் நிராகரிப்பதையே முன்வைக்கிறது. இப்படி என்னை நிராகரித்துச் சென்றவர்களையும் திரும்பிப் பார்க்கவைக்கும் தாக்கத்துடன் நான் பதிவெழுத வேண்டும் என்பதே என் ஆசையாகயிருக்கிறது.

Related Articles

7 comments:

 1. --ஆனால் private, protected, public என்று அக்ஸஸ் மாடிஃபயர் வைத்து இது மாறலாம் இது மாறவே கூடாது, இந்த மாற்றம் என்னிலிருந்து உண்டானால் மாறலாம் என்று வரைமுறைப்படுத்த வாழ்க்கை என்பது ஜாவா ப்ரொக்கிராம் அல்லவே.--

  ஹாஹ்ஹா Class :)

  ReplyDelete
 2. "நிராகரித்துச் சென்றவர்களையும் திரும்பிப் பார்க்கவைக்கும் தாக்கத்துடன் நான் பதிவெழுத வேண்டும் என்பதே என் ஆசையாகயிருக்கிறது"
  மோஹன்.. நிராகரிப்பின் பின் சென்று கவன ஈர்ப்புக்களுக்களில் இறங்கினால் நமக்கான பாதையில் நாம் இல்லை நன்பனே.. நம் வெற்றியும், தோல்வியையும் முடிவு செய்பவர்கள் நாம் மட்டுமே...என்ன ஒப்புமைதானே....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கிருத்திகா,

  கவன ஈர்ப்பு கிடையாது, யாரையும் கவர்வதற்காய் எழுதுவது இல்லை.

  நம் எழுத்தில் சாதாரணமாக வரும் முதிர்ச்சி அந்த திரும்பிப் பார்த்தலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுவரும்.

  என் வெற்றி தோல்விகளை நான் மட்டும் தீர்மானிக்க முடியாது அதே போல் எந்த தனிமனிதரும் அமைப்பும் செய்யமுடியாது. இது ஒரு வித்தியாசமான கலவை.

  ReplyDelete
 4. /வெகு காலத்திற்கு முன் குமுதம்/ஆனந்த விகடன் தெரியாது படித்தக் கதை ஒன்று நினைவில் வருகிறது. மதுரையில் இரவில் நடக்கும் கதை, இட்லி சுட்டு விற்கும் கிழவியொருத்தியை போலீஸ்காரர் இடத்தைக் காலி செய்து கொண்டு கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருப்பார், பாட்டி, இல்லை நான் இருப்பேன் என்று நம்பி என்னைத் தேடி இங்கே ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு கொடுத்துவிட்டுத்தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். /

  இது விகடனில் வந்த எஸ். ராமகிருஷ்ணனின் தொடரில் வந்ததாக நினைவு. தவறாகவும் இருக்கலாம் :)

  /நம் எழுத்தில் சாதாரணமாக வரும் முதிர்ச்சி அந்த திரும்பிப் பார்த்தலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுவரும்./

  உண்மை.

  ReplyDelete
 5. அருட்பெருங்கோ,

  எழுதும் பொழுதே நினைத்தே எஸ்ராவினுடையதாக இருக்கலாம் என்று தேடிப்பார்க்க சோம்பேறித்தனம்.

  ஆமாம் நான் நிராகரித்துவிட்டு நகர்ந்த சிலரின் இந்த முதிர்ச்சி என்னை, என்னை நிராகரித்துச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டுவந்து என் முதிர்ச்சியை கேள்விப்படுத்தியது.

  ஆனால் நான் சொன்னது போல் வெற்றி / தோல்வியை நான் மட்டும் முடிவு செய்துவிட முடியாது.

  ReplyDelete
 6. நிராகரித்துச் சென்றுவிட்ட பதிவுகளில் இப்படித் திரும்பிப் பார்க்கவைத்த பதிவுகளின் சதவீதம் நிராகரிப்பதையே முன்வைக்கி//////
  பொண்ணுங்க படிக்கிற மாதிரி எழுதமாட்டேங்கிறாங்கன்னு இவ்வளவு அழகா சொல்லுறதுக்கு உங்கள விட்ட ஆளே கிடையாது தல.

  ReplyDelete
 7. அனானிமஸ்,

  என்ன விளையாட்டு இது.

  ReplyDelete

Popular Posts