In அரசியல்

இராவணன்

இராவணன்
எனக்குப் பையன் பிறந்தால் இராவணன்னு பெயர் வைப்பேன் என்று அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுதுதான் எல்லாம் தொடங்கியது(எனக்குப் பையன் பிறந்து இராவணன்னு பெயர் வைக்கவில்லை, நன்மாறன் பொகுட்டெழினி- என்று வைத்திருக்கிறோம்). ஏற்கனவே ஒரு முறை ராமன் தமிழன்னு சொன்னதால் நான் இராவணன் பெயர் சொல்லி அடித்த கூத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அக்கா புருஷன் ‘இராவணன்’ தமிழ்ப் பெயர் இல்லையென்று சொன்ன ஞாபகம். இன்னொரு முறை நான் பாரதிதாசனைத் துணைக்கிழுத்தேன். ‘தமிழ்மறைகள் நான்கும் சஞ்சரிக்கும் நாவான்’ தமிழனாவும் இராவணன் தமிழ்ப்பெயராகவும் இல்லாமல் இருக்க வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான் என்று சொல்லிவைத்திருந்தேன். அதல்ல பிரச்சனை இப்பொழுது,பேச்சுப்போட்டிகளில் பங்குபெறும் எவருக்கும் பாரதிதாசனும், ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ பாடலும் புதிதாய் இருக்காது. சொல்லப்போனால் பாரதிதாசனுடைய வரிகள் பேச்சுப்போட்டிகளில் வீராவேசத்துடன் பேச எப்பொழுதும் துணை நிற்கும், ‘பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியில் வா!’ சொல்லாத என் போட்டி அனுபவம் மிகவும் குறைவே. ஆனால் எல்லா இடங்களிலுமே அந்தப் பாடல் வேண்டுமென்றே குறைக்கப்பட்ட வரிகளுடன் சொல்லப்படுவதுண்டு. எனக்குத் தெரிந்த பேச்சுப்போட்டிகளில் பேசும் நண்பர்களுக்குக் கூட முழுமையான அந்தப் பாடலின் வரிகள் தெரியாமல் இருந்திருக்கின்றன. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறதே என்று சனிக்கிழமை இரவுகளில் ’அசத்தப்போவது யாரு?’ பார்ப்பதுண்டு அதில் வந்த பையன் ஒருவன் ‘தென்றிசையைப் பார்க்கின்றேன்...’ என்ற வரிகளுடன் ஆரம்பித்ததும் கொஞ்சம் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது.

‘வீழ்ச்சியுறு தமிழகத்தின்...’ தொடங்கி பலர் பாரதிதாசனின் ‘வீரத்தமிழன்’ வரிகளை உபயோகிப்பதுண்டு ஏனென்றால் அதில் இருக்கும் ஒரு தந்திரம், ஆனால் ‘வீரத்தமிழன்’ பாடலின் ஆரம்ப வரிகளில் இருந்து பெரும்பாலும் மக்கள் ஆரம்பிப்பதில்லை, பாரதியின் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’உம், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’உம், உபயோகப்படுத்தப்பட்ட அளவு அதன் பின்னான வரிகள் உபயோகப்படுத்தப்பட்டதில்லை. ‘உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின்’ வரிகள் மட்டும் பெரும்பாலும் முழுதாய் உபயோகப்படுத்தப்படும், ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில்’ வரிகளைப் போல. ஆனால் ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில்’ வரிகள் எப்பொழுதும் கடைசி இரண்டு வரிகள் சொல்லாமல் விடப்படும். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, இனி அந்தப் பாடல். பாடலைப் பார்த்தால் நான் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமே கூட இருக்காது.

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


விஷயம் புரிந்திருக்கும் இப்பொழுது, இராவணனைத் தவிர்க்க வேண்டி பெரும்பாலும்(என்ன பெரும்பாலும் எல்லோருமே) அந்த வரிகளைத் தவிர்த்து விடுவார்கள், ஏனென்றால் ‘கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!’ என்பது ஒரு முடிவாக அமைந்துவிட்டதால். சன் டிவியில் பேசிய அந்தப் பையன், இந்தப் பாடலை கொலை செய்தான் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பாரதிதாசன் எழுதிய முழு ‘வீரத்தமிழன்’ பாடல்.

வீரத் தமிழன்
தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
’கீழ்ச்செயல்கள் விடவேண்டும்’ என்று சொன்ன வரிகளையே கீழ்த்தனமாய் விட்டுவிடுவது தான் irony இங்கே! சன் டிவியில் வந்த அந்தப் பையன் முதல் பாடலில் மூன்று வரிகள் இரண்டாவது பாடலில் இரண்டு வரிகள் மூன்றாவது பாஅலில் ஆறு வரிகள் என்று சொன்னான். அது யாருக்கும் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது given that இந்தப் பாடலை முன்னால் அறியாமல் இருந்தால். தங்களுக்கு ஏற்றதைப் போல் பாடல்களை வெட்டி ஒட்டிக் கொள்வது என்பது ’கீழ்ச்செயல் தான்’. ‘கீழ்ச்செயல்கள்’ விட்டுவிடுவோம் ராவ ணன்தன் கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்துவோம்.

பதிவில் உபயோகப்படுத்தியிருக்கும் மற்றப் பாடல்களின் வரிகள்,

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

Related Articles

2 comments:

 1. கதாநாயக பாத்திரம் இராமன்தான் என்று முன்முடிவாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. விஜய் படங்களில் வரும் த்ரிஷா வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் போன்ற அமைப்பு கொண்டது. விஜய் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம்.

  வரலாற்றின் தகவல்கள் தூவப்பட்டு இருக்கலாம் ஆனால் இராமாயணம் அக்மார்க் வரலாறு அல்ல. இருந்தாலும் கதையின் போக்கிலேயே சென்றால் கூட.....

  தனது தங்கைக்காக அடுத்தவன்மனைவியை சிறையெடுத்தவன் இராவணன்.

  யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக தனது மனைவியையே சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பியவன் இராமன்.

  **

  இராவண வரலாறு இலங்கையில் இருந்து எழுதப்பட்டு இருந்தால் அது உதவும்.

  **

  பாடலைப் பகிர்தமைக்கு நன்றி !

  ReplyDelete
 2. கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
  கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!

  ஏதோ புரியிற மாதிரி இருக்கு.. :)

  ReplyDelete

Popular Posts