In தொடர்கதை

தேவதையின் காதலன் - 2

நான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லவ்லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் இது மாதிரியான லெட்டர்கள் கிழித்துப் போடப்படும், இல்லை கூப்பிட்டு திட்டுவிழும், ஆனால் இந்த முறை லெட்டர் பிரின்ஸியிடம் சென்றது. விஷயம் சொல்லிமுடித்ததும் அவளை வெளியே அனுப்பிவிட்டார். நாங்கள் மூன்று பேரும் தலையைக் குனிந்தபடியே உள்ளே நின்றோம். பிரின்ஸிபால் ஜூலியன் ஒரு தமிழ்ப் பேராசிரியர்.

"யார் எழுதினா இந்த லெட்டர்?" சத்தமாய்க் கேட்டார்.

நான், "சார், எழுதினது நான்தான்; அந்தப்பொண்ணு தப்பா இவங்களையும் இழுத்துவிட்டுருச்சு." சொல்லி விட்டு தலைகுனிந்து நின்றேன். பிரின்ஸிபால் அவர்கள் இருவரையும் பார்த்தார். இருவரும் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல் பாவனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெல்லாம் எவ்வளவு திமிரிருந்தா, முதல் நாளே லவ்லெட்டர் கொடுப்பீங்க, உங்களுக்கெல்லாம் யார்றா சீட் கொடுத்தா காலேஜில. சரி நீங்க இரண்டு பேரும் வெளியே நில்லுங்க" சொல்லி அவர்களை வெளியே அனுப்பினார்.

என்னை மேலும் கீழும் பார்த்தவர், "சொல்லுங்க சார்? உங்கப்பா அம்மா என்ன பண்ணுறாங்க?"

"சார், ரெண்டு பேரும் டீச்சர்."

அவர் முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம் தொடங்கி மறைந்தது, "டீச்சர் பையனா நீ, உன்னையெல்லாம் என்ன பண்ணினா தகும்?" என்ன இருந்தாலும் ஆசிரியர் பையன் தன் பையன் போலத்தான் என்ற எண்ணம் வந்திருக்குமாயிருக்கும்.

"இல்லை சார், தெரியாமல் எழுதிட்டேன் சார். இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் சார்." தடவி தடவி சொன்னேன்.

ஒரு மணிநேரம் பாட்டுவிழுந்தது, ஆசிரியர் புள்ளைகள் முன்மாதிரியா நிக்கணும் இந்த மாதிரி தலைகுனிந்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி.

"இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கு மேல உன்பேர்ல யாராவது தப்பு சொன்னாங்கன்னா அவ்வளவுதான் நீ மேடத்தைப் பார்க்க வேண்டிவரும். அப்புறமென்னா டிசிதான். சரி அவனுங்களையும் கூப்பிட்டு ஒரு அப்பாலஜி லெட்டர் கொடுத்துட்டு ஒழுங்கா வகுப்புக்குப் போங்க."

"சார் அவங்க வேணாம் சார். நான் வேணா எழுதித்தரேன் சார். நான்தான் சார் பண்ணினது. அவங்க பாவம் சார்."

நான் சொன்னவுடன் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர், "சரி எழுதிக் கொடுத்துட்டு போ."

நான் எழுதிகொடுத்துவிட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்து பாவமாய்ச் சிரித்தேன். அவர்களும் நானும் சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்ததும்...

"மாமு, அப்ப கௌசல்யா எங்களுக்கு தங்கச்சி, அதானே?" சொல்லிவிட்டு ராஜேஷ் சிரித்தான்.

"மாப்ள, முத நாளே அப்பாலஜி லெட்டர்டா, அரசியல்ல இதெல்லாம் சகஜம்னாலும் இது கொஞ்சம் ஓவர் மச்சி, தமிழ் மீடியம்னதுமே நினைச்சேன். சரியாப் போச்சு. இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா?" இருவரும் தலையிலடித்துக் கொண்டனர்.

"கேட்காட்டி விடவா போற சொல்லித்தொலை" பிரபு.

===
"காதல் கடிதம்
எழுதிய என்னை
மன்னிப்பு கடிதம்
எழுதவைத்ததேன்
பெண்ணே?

ஒருவேளை
தேவதைகளுக்கு
மனிதர்களின் மொழி
புரியாதோ?

நான்
உன்னைக்
காதலிக்கிறேன் இந்த
மூன்று வரியை விளக்க
உனக்கு முனைவர்
பட்டம் பெற்றவர் தேவையோ?

உனக்கும் எனக்குமான
காதலை
ஊருக்குத் தெரியவைத்தாயே
சரிசரி ஒருநாள்
தெரியவேண்டியதுதானே!"
===

"மாம்ஸ் உண்மையைச் சொல்லு, நீ அவள உண்மையிலேயே காதலிக்கிறியா, நம்ம ஸ்கூல்ல பார்க்காத ஃபிகரா, இவள்லாம் என்னடா பம்மாத்து. இதெல்லாம் சரியாத் தெரியலை மவனே, டாடி போட்டு வாங்கிடுவாரு ஞாபகம் இருக்கில்லை." அவன் சொன்னதும் எங்க அப்பா வேறு மனதில் வந்து போனார், நான் ஒரு முறை தலையை வழுக்க ஆட்டி அந்த நினைவை நீக்கினேன்.

"அப்படியெல்லாம் இல்லடா, ஏதோ சுமாரா இருக்காளேன்னு லெட்டர் கொடுத்தா. இப்பிடிச் செய்வான்னா நினைச்சேன். சரி சரி, பார்த்துப்போம். இன்னும் மூணுவருஷம் இருக்குள்ள, நம்ம பழக்கவழக்கத்தை மாத்திக்க வேண்டாம். அப்பிடியே இருப்போம். ஸ்கூல் மாதிரியில்லாம இங்க அடிக்க மாட்டாங்ய, அதனால் ப்ராப்ளம் கிடையாது. ஆனா மாப்ள என்னமோ மனசுல இதுவரைக்கும் இல்லாத ஒரு லேசா உறுத்தல் வருதுடா, தப்பு பண்ணிட்டமோன்னு"

"மாம்ஸ், ரொம்ப ஃபீல் பண்ணுற. இதெல்லாம் நமக்கு சரிவராதுடா. அவளுக்கு ஒருநாள் நிச்சயம் தெரியவரும் நாம யாருன்னு. அதுவரைக்கும் வெயிட் அண்ட் சீ தான்." இந்த மாதிரி விஷயங்களில் ராஜேஷ் நன்றாக பேசுவான், ஆனால் பிரபு வாயை மூடிக்கிட்டு இருப்பான். ஆனா உதவின்னு வந்துட்டா முதல் ஆளா பிரபுதான் இருப்பான்.

நாங்கள் படித்த ஆங்கில மீடியம் பள்ளிகளில் லெட்டர் கொடுப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை, பெண்கள்தான் எங்களைக் கலாய்ப்பார்கள், 'தோடா, லெட்டர் கொடுக்கிறான் மொத நாளே!'ன்னு. நான் அதைத்தான் அவளிடம் இருந்து எதிர்பார்த்தேன். ஆனால் நிச்சயமாய் பிரின்ஸிபால் ரூம் விசிட் நாங்கள் எதிர்பாராதது. சொல்லப்போனால் நாங்கள் மூன்று பேரும் சிறிது பயந்துதானிருந்தோம்.

o

நாங்கள் கல்லூரி நேரம் முடிந்து எல்லோரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, வகுப்பிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அப்பொழுது அங்கே எதையோ மறந்துவிட்டுப் போனதை எடுக்க வந்த கூடப்படிக்கும் ஒரு பெண், நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நேராய் எங்களிடம் வந்தாள்.

"வணக்கம், என் பேரு சிவசங்கரி, ம்ம்ம் வந்த முதல் நாளே லவ் லெட்டரா, ஜமாய்ங்க, என்ன சொன்னாரு பிரின்ஸி?" சிரித்தபடியே கேட்டாள்.

"என்னங்க ஜமாய்க்கிறது, முதல் நாளே அப்பாலஜி லெட்டர் கொடுத்தாச்சு. ஆனாலும் உங்க ஃபிரெண்ட் ரொம்ப மோசங்க, இதுக்கு கூப்பிட்டுவச்சு கன்னத்தில அறைஞ்சிருக்கலாம்." நான் புலம்பினேன்.

"அவ என் ப்ரெண்டெல்லாம் கிடையாது, இருந்தாலும் நீங்க செஞ்சது மட்டும் சரியா, முதல்நாளே லவ்லெட்டர் எல்லாம் ரொம்ப ஓவர்." அவளிடம் கோபமிருந்தது.

"நான் உண்மையிலே இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கலை, பார்த்துட்டு கூப்பிட்டு திட்டுவாங்கன்னு நினைச்சேன். சரி போகுது விடுங்க. காலையிலே நீங்க சொன்னதைக் கேட்கலை, நீங்க எந்த ஊரு?" றகு நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; கிளம்பும் தருவாயில், "நான் உங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமா?"

அதற்கு நான் "என்னை நிச்சயமா கூப்பிடலாம், ராஜேஷையும் கூப்பிடலாம், ஏன்னா அவன் ஸ்கூல் டிக்கெட் ஒன்னை சைட் அடிக்கிறான்; அவளும்தான். ஆனா பிரபுவைப்பத்தி என்னால சொல்லமுடியாது. நீங்க அவனை வேணும்னா பிரபுன்னே கூப்பிடுங்களேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

அவளும் சிரித்துவிட்டு, "சரி அப்பிடியே கூப்பிட்டுருவோம். நான் வரேன்." சொல்லிவிட்டு நகர்ந்ததும். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் சீக்கிரமே வந்து சிவசங்கரியின் சீட்டின் மீது உட்கார்ந்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் காலேஜ் பஸ்ஸில் வராதவர்கள் முன்னமே வந்துவிடுவார்கள். காலேஜ் பஸ்ஸில் வந்த கௌசல்யா, எங்களைக் கண்டுகொள்ளாமல் சிவசங்கரியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நாங்களும் எதற்கு பிரச்சனையென்று சங்கரியிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து எங்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.

நாங்கள் இங்கே வந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விட்டது.

வகுப்பு தொடங்கியது, லெக்சரர்ஸ் வந்து சிலபஸ் கொடுத்துவிட்டு, முன்னுரையைத் தொடங்கினர். நாங்கள் ஏதோ வேற்று கிரகத்து மனிதர்கள் போல் உட்கார்ந்திருந்தோம். டீ பிரேக்கின் போது நாங்கள் வெளியே செல்லவில்லை; உட்கார்ந்திருப்பதைப் பார்த்த சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே வெளியே போகலை?"

"இல்லைம்மா போகலை, சரி என்ன சொல்றா உன் ஃபிரண்ட்?" அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்பொழுது எனக்கிருந்த ஒரே வாய்ப்பு சங்கரி தான்.

"நான் உங்ககூட பேசறது பிடிக்கலைன்னு சொன்னாள்."

நான் எதிர்பார்த்தது தான், "அதுக்கு நீயென்ன சொன்ன?" ஆர்வமாய்க் கேட்டேன்.

"மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ்னு சொன்னேன், அவளுக்கு கோபம் வந்திருச்சு, ஆனா சிறிது நேரத்தில் அந்த விஷயத்தை விட்டுட்டா மற்ற விஷயங்களை பேசத் தொடங்கிட்டா." சொல்லிவிட்டு சிரித்தாள்.

நான் "ரொம்ப பசிக்குது, டிபன்பாக்ஸ் இருக்கா" கேட்டேன்.

அவள் அதற்கு பயந்ததைப் போல் நடித்து, "அய்யோ, உங்களுக்கு டிபன்பாக்ஸ் கொடுத்தால் திரும்பி சும்மா வராதே, உள்ளே பெரிய பாமோடல்ல வரும்." சொன்னவள் நேராய் போய் டிபன்பாக்ஸ் எடுத்துவந்து கொடுத்தாள்.

"அண்ணே எதுவும் சொல்றதுன்னா நேர்லயே சொல்லுங்க லெட்டர் எல்லாம் வேண்டாம்" சொல்லிவிட்டுச் சிரித்தாள். நாங்கள் அவசரமாய் அவளுடைய டிபன் பாக்ஸ் தோசைகளை சாப்பிட்டு முடித்து, "சிவா நாங்க கழுவி கொடுத்துருறோம்!" சொல்லி ராஜேஷிடம் டிபன்பாக்ஸை கொடுத்தேன். இதையெல்லாம் அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பரவாயில்லை, தோசை எப்படி இருந்தது."

"பரவாயில்லை, சாப்பிடுறமாதிரிதான் இருந்தது. ஆனால் காரம் பத்தலை." நான் சொன்னதும்.

"ஆனால் இந்த மூஞ்சு மட்டும் ஏன் குரங்காட்டம் முளிக்குது." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

"அவன் மூஞ்சே அப்படித்தான், அதுசரி ஏன் நீ அவனை மட்டும் தனியா கவனிக்குற, இது சரியாத் தெரியலையே?" நான் சிரித்தேன்.

பக்கத்தில் வந்து என் தலையில் கொட்டிவிட்டு, "ஆரம்பிச்சிட்டீங்களா, இந்த வம்புக்கு நான் வரலை. என்னை விட்டுருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

பிரபு என்னிடம், "மாம்ஸ் என் மூஞ்சு குரங்காட்டமா இருக்கு?" வருத்தமாய்க் கேட்டான்.

நான் ராஜேஷிடம் திரும்பி, "புதுசா ஒரு கதை ஆரம்பிக்குதுடா மாப்ள." சொல்லிச் சிரித்தேன். ஆனால் நான் இங்கே பேசி, சிரித்துக் கொண்டிருந்தாலும் என் மனம் முழக்க கௌசியிடம் தான் இருந்தது. அவள் இங்கு நடந்த அத்துனை நிகழ்ச்சிகளையும் கவனிக்காதது போல் இருந்தாள். நான் என் நோட்டையெடுத்து கவிதையெழுதத் தொடங்கினேன்.

===
"பார்த்தும் பார்க்காதது போல்
நடிக்கிறாய் தோழி,
நான் இருந்தும் இல்லாமல்
ஆய்விட்டேன் போடீ."
===

o

மதியம் சிவசங்கரியின் சாப்பாட்டுக்கு, ஒரு குஸ்காவும் வடையும் வாங்கிக் கொடுத்தோம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. நாங்கள் வகுப்பில் எல்லா லெக்சரர்ஸையும் ஓட்டிக்கொண்டிருந்தோம். இங்கே கல்லூரியில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது பிடித்திருந்தது. இப்படித்தான் ஒருநாள், பழனிவேல் C எடுத்துக்கொண்டிருந்தார். எடுத்துக்கொண்டிருந்தார் என்றால் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக்கொண்டிருந்தார்.

நாங்கள் வேண்டுமென்றே சிரித்துக்கொண்டிருந்ததால், என்னையும் ராஜேஷையும் எழுந்து நிற்க வைத்தார். அவர் ஒரு ஃபார் லூப்பை விவரித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் தடுமாறிக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்னர் கூட அவரால் முடியவில்லை. இதையெல்லாம் மிகவும் பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபுவால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. அவன் முகம் இன்னும் விகாரமானது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம் முடியவில்லை.

"சார் வருமா வராதா?" எழுந்து கேட்டேவிட்டான்.

வகுப்பே திரும்பி எங்களைப் பார்த்தது, அவளைத்தவிர. நானும் ராஜேஷும் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பழனிவேல் கோபமாகிவிட்டார். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை, அவர் முகமெல்லாம் சிவந்துவிட்டது.

"இன்னிக்கு கொஞ்சம் சரியாவரலை, எங்கையோ தப்பாகுது வேறயாராவது வந்து கிளியர் பண்ணறதுன்னா பண்ணுங்க." சொல்லிவிட்டு சேரில் உட்கார்ந்துவிட்டார்; கையை அசைத்து எங்களையும் உட்கார சொன்னார். பிரபுவால் அவனை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை, எழுந்துபோய் சொல்வதற்குத் தயாரானான். நானும் ராஜேஷும் அவன் தோளைப் பிடித்து அமுக்கி உட்காரவைத்தோம்.

அடுத்த அரைமணிநேரம் யாரும் பேசாமல் அமைதியாகவே கழிந்தது, அவர் போனதும் கௌசல்யா நேராக எங்களிடம் வந்தாள்.

"ஹலோ நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாது, நானெல்லாம் படிக்க வந்திருக்கேன். நீங்க பண்ணறதால நாங்களும்தான் பாதிக்கப்படுறோம். இதையெல்லாம் நிறுத்திடுங்க..." அவளை முடிக்ககூடவிடாமல் ராஜேஷ் தொடர்ந்தான்.

"ஹலோ நீங்க நிறுத்துறீங்களா, எங்களைப் பார்த்தா பொறுக்கீங்க மாதிரியா தெரியுது? நாங்களும் படிக்கத்தான் வந்திருக்கோம். அந்தாளு மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறான். அதைக்கேட்டா என்னவோ பருப்பு மாதிரி பேசுறீங்களே, போங்கம்மா போய் கடம் தட்டுற வேலையைப் பாருங்க. இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வைச்சுக்கோங்க!!" பிரபுவும் மிகவும் கோபமாக இருந்தான்.

"கடம் தட்டறதுன்னு சொல்றதெல்லாம் சரியில்லை, என்னவோ பண்ணி மார்க் வாங்க்குறோம் இல்லை, உங்களை மாதிரியா? படிக்கிற பிள்ளைங்களா நீங்கள்லாம், முதல் நாளே லவ் லெட்டர் கொடுத்துக்கிட்டு, லெக்சரர்ஸ் பாடம் நடத்த விடாம பண்ணிக்கிட்டு, நீங்கள்லாம் நிச்சயமா படிக்க வரலை, இதுல தப்பு சொன்னா கோபம் வருதாக்கும் கோபம்."

அவள் இப்படிச் சொன்னதும் பிரபு எங்களைப்பற்றிய ஒரு விஷயத்தை உளறிவிட்டான், நாங்கள் எதை மறைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதைச் சொல்லிவிட்டான்.

"லவ் லெட்டர் கொடுத்ததுக்கு பிரின்ஸிபால் கிட்ட போட்டுக்குடுத்துட்டல்ல, அதுக்கப்புறம் அதப்பத்தி நீ பேசக்கூடாது, என்னாடி பெரிய மார்க் வாங்கியிருக்க, உன்னைவிட நாங்க மூணுபேருமே +2 ல மார்க் கூட, போதுமா, போய் உட்கார்ந்துக்க. வந்துட்டாளுங்க, அங்கேயிருந்து கடம் அடிக்கிறதுக்கு." இது பிரபு.

அவளால் நம்ப முடியவில்லை, எங்களாலும்தான்; எங்கள் வழக்கமே அப்படித்தான். நாங்கள் எங்கள் உண்மையான மார்க்கை சொல்லி தனியே பிரிந்து போகவிரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் நிறைய மதிப்பெண் வாங்கிவிட்டும் இந்தக் காலேஜில் சேர்ந்ததால், உண்மையான மதிப்பெண் சொன்னால் நிறைய கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கும், அதனால் நாங்கள் வாங்கிய மார்க்கில் பாதியைச் சொன்னோம். ஆனால் இந்த ஓட்டவாய் சொல்லுவான்னு நாங்க நினைக்கவேயி ல்லை, அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் போய் அவள் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள். சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே பிரபு சொல்றது உண்மையா?"

"ஆமாம்."

"இதையேன் நீங்க எங்ககிட்ட மறைச்சீங்க?"

"எங்களுக்கு மார்க்கை சொல்லிக்காட்ட விரும்பலை அதான் வேணாம்னு மறைச்சோம். மற்றபடிக்கு ஒன்னுமில்லை."

"ஆனாலும் இப்பத்தான் நீங்க பண்ணினது சரியில்லை, அப்ப உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமில்ல, அதான் நீங்க பாடம் நடத்தவிடாம பண்றீங்க. இனிமே இப்பிடி பண்ணாதீங்க. சரியா? ஆமாம் ஏன் நீங்க இன்ஜினேரிங் படிக்கலை?"

"இந்தக் கேள்விக்காகத்தான் நாங்க மார்க்கைச் சொல்லாம மறைச்சது, குடும்ப பிரச்சனைன்னு வச்சுக்கோயேன்." நான் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"ஆனா உங்களையெல்லாம் பார்த்தா படிக்கிற பசங்க மாதிரியே தெரியலை, ரௌடிங்க மாதிரி தான் இருக்கீங்க, அதுவும் இந்த மூஞ்சியைப் பார்த்தா சொல்ல வேண்டியதேயில்லை." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

நான் சொல்லத்தொடங்கும் முன், "வேணாம் ஒன்னும் சொல்லவேணாம், நான் இதைப்பத்தி பேசவேணாம்னு நினைச்சாலும் முடியலை. சரி இனிமே பிரபுவைப்பத்தி பேசலை, நீங்க வேற எதையும் நினைச்சுக்காதீங்க." சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அடுத்த வாரங்களில் கௌசல்யா நடந்துகொள்ளும் முறையில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நாங்கள் ஜோக் அடித்தாள் திரும்பி பார்த்து சிரித்தாள். லேப்பில் ஒருநாள் ஒரு ப்ரோக்கிராம் வொர்க் ஆகவில்லையென சொல்லி சிவசங்கரி மூலம் பிரபுவை கூப்பிட்டனுப்பினாள். அவன் வேண்டுமென்றே அங்கேபோய் தெரியாதது போல் நடித்து, என்னைக் கூப்பிட்டான் அவள் சிறிது தூரம் நகர்ந்து செல்ல, நான் எரர்ரை சரிசெய்துகொடுத்துத் திரும்பினேன். ராஜேஷும் பிரபுவும் நக்கலடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

"என்ன மாம்ஸ், காத்து உன் பக்கம் வீசுது போலிருக்கு!"

"தம்பி தெரியுமில்ல, அடுத்தது செகரட்டரி ரூமும் டிசியும் தான். அதனால பெட்டர் இதப்பத்தி பேசாம இருக்குறதுதான்."

தொடரும்...

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts