In சினிமா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

கம்மாட்டிப்பாடம் பார்த்தேன்.

துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும்.

மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.---------------------------------------------

அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன்.

இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம்.

பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன்.

பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு.

-----------------------------------

இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து.

பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான்.

சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான். 

------------------------------------

கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது.

அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால்.

கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ. ------------------------------------

சில பாடல்கள்

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது.

கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன்.

நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது.

புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா.

ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான். 

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts