In சினிமா சினிமா விமர்சனம்

காந்தாரா - மாயமந்திரம்


இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி எழுதவில்லை. பொன்னியின் செல்வன் எங்கே போகப்போகிறது எழுதிவிடுவோம்.காந்தாரா பற்றி அந்தப் படம் தியேட்டரில் வெளியாகியிருந்த பொழுதே அறிந்திருந்தேன். நானும் என் மனைவியும் பின்னர் மோசமான தியேட்டர் பிரின்ட் வந்த பொழுது பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். தமிழ்நாட்டில் இல்லாமல் போன சோகங்களில் ஒன்று இது. நான் அதற்குப்பின் ரிஷப் ஷெட்டி பற்றி வந்த யூடியூப் வீடியோக்கள், பின்னர் வராஹ ரூபம் பாட்டு பிரச்சனை, என்று ஏகப்பட்ட விஷயங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். எனக்கு அப்படி ஒரு விநோத வழக்கம், ஏறக்குறைய அந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த பொழுது எனக்கு காந்தாரா பற்றித் தெரிந்திருந்த ஒரே விஷயம், அது கன்னடத்தில் பெறுவெற்றி பெற்றப் படம். அவ்வளவுதான். 


பசுமரத்தாணி என்று நான் பள்ளியில் படித்த பொழுது சொல்வார்கள், அது போல் மனதில் பதிந்து போய்விட்டது இந்தப் படம். Spell boundஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி, கன்னட ராஜாவிடம் பஞ்சூர்லியை அவர் எடுத்துச் செல்வதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, சாமியாடிக் கொண்டே 'ஓவ்' என்று பெருங்குரலெடுத்து கூவி காடே அதிர்ந்த பொழுது, திரைப்படத்துடன் ஒன்றிய மனது, க்ளைமேக்ஸில் சிவா அவனது தந்தையுடன் சேர்ந்து மறைந்த பொழுதுதான் வெளியில் வந்தது. இப்படி ஒரு மனவெளுச்சியை நான் எப்பொழுதும் அடைவதேயில்லை. மொபைல் ஃபோன்களுடனான வாழ்க்கை இப்படியான பொழுதுகளை உருவாக்குவதில்லை. 


ஆரம்பம் மற்றும் முடிவு மட்டுமல்ல, ஏனைய மற்ற பொழுதுகளில் திரைக்கலை அதன் மையப்பகுதியில் இருந்து விலகிவிடவில்லை. வனமும் அதன் வளப்பும் பச்சையும் படம் முழுவதும் விரவியிருந்தது, அங்கிருந்து நீண்டு அப்படியே மனதில் அப்பிக்கொண்டது. பூதகோல அலங்காரத்துடன் கொண்ட ரிஷப் செட்டியின் உருவம் மனதில் இருந்து விலக கனகாலம் பிடித்தது. எத்தனை காலம் அவர் அந்த ஆட்டத்தை கற்றுக் கொண்டார் என்று தெரியாது, அந்த முகம் அளித்த சிறுசிறு நயனம் கூட மனதில் அப்படியே நின்றது, கடைசியில் கிஷோரை அழைத்து அணைத்துக் கொள்ளும் பகுதியெல்லாம் வசனமே தேவையில்லை திரைப்படங்களுக்கு என்பது எத்தனை உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தியது. அந்த க்ளைமேக்ஸ் ஒரு உச்சம். எப்பொழுதும் சினிமாக்களில் நடைபெறாக, அடைய முடியாத, ஏக்கம் கொள்ளத்தக்கதான ஒரு உச்சம். மனம் நெகிழ்ந்துபோயிருந்தது. 

எனக்கு கடவுள் மீதோ, மயானக் கொள்ளை மீதோ, சாமியாடுவதன் மீதோ நம்பிக்கை கிடையாது. ஆனால் கலை மீது உண்டு, அது ஒரு கலைப்படைப்பு என்றும் அதன் உச்சத்தை ஒரு கலைஞன் அடைய முடியும் என்றும் நம்புகிறேன், ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் நடிப்பு மூலம் அந்த உச்சத்தை நாமும் அதே நிலையில் பார்க்கும், உணரும், அனுபவிக்கும் ஒரு அதிசயம் காந்தாரா மூலம் நடந்தேறி இருக்கிறது. கலகலவென ஆபரணங்கள் ஒலிக்க படம் முழுவதும் வனத்திற்குள் அலையும் பன்றி ஒரு நல்ல உருவகம், செட்டுக்குள் இருந்து சினிமா கேமராவை வெளியில் எடுத்துவந்தது பாரதிராஜா என்று சொல்வார்கள். இப்படி ஒரு ப்ரேமிங், அகலமாகன வனத்தை அப்படியே வெளியில் இருந்து காட்டியிருக்கிறார்கள். கேமரா ஒரு அறைக்குள் இருக்கும் மொத்தக் காட்சிகளை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். 

ஆட்டக்குறை பற்றியும் அதில்லாமல் போகவதைப்பற்றியும் ஜெமோ லங்காதகனத்தில் சொல்லியிருந்த வரிகள் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. 


ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...


அதுதான் இல்லையா? சிவாவும் அவனது தகப்பனும் அடைவது. பூரணம், முக்தி, முற்றுப்புள்ளி. அவர்கள் திரும்பிவருவது இல்லை. இதே போல் வெறிபிடித்துதான் இருந்தது லங்காதகனம் படித்த பொழுது, வெறும் எழுத்து என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இயற்றலை விடவும் நாடகத்துக்கான வலிமை என்பதில் இருக்கும் வித்தியாசம் தான் லங்காதகனத்திற்கும் காந்தாராவுக்குமான வேறுபாடு. அடித்துப் போட்டது போலாகிவிட்டது. அது ஒரு ட்ரிக்-ஆக இருக்கலாம், என்னால் கண்களில் கண்ணீர் வராமல் அறம் நாவலின் எந்தக் கதையையும் படிக்க முடியாது. அது ட்ரிக் என்கிறார்கள், நானும் உணர்கிறேன் படிக்கும் பொழுது என் மூளைக்கு புரிவதில்லை. அப்படியானது தான் இந்தப்படமும், மயக்கம் ஏற்படுத்தும் அந்த இசை, அசைவுகள், ஒளி, நிறம் ஒரு ட்ரிக் ஆக இருக்கலாம், ஆனால் எத்தனை படத்தில் இப்படி ஒரு முழுமை கிடைக்கிறது. 


காந்தாரா ஒரு மாயமந்திரம். ஒரு சொடக்கு போட்டதும் மயங்கிப் போவதைப் போல் அந்த முதல் 'ஓவ்'ல் அந்தப் படம் என்னை உள்ளிழுத்துக்கொண்டு விட்டது. 


அவ்வளவுதான். 


பின்னர் தாழ்வுமனப்பான்மையில் திமிரும் தமிழ்நாட்டு மந்தைக்கூட்டம் ஒன்று இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றதென்றே தெரியவில்லை என்று டிவிட்டரில் பன்றிக்கூட்டமாய் சேற்றில் புரண்டுகொண்டிருந்தது. அவர்களுக்காக,


ஒரு கலைப்படைப்பு என்பது எல்லாருக்குமானது அல்ல. நீங்கள் ஒரு அளவு வளர்ந்தால் தான் ஒரு கலைப்படைப்பின் முழுமையை/உச்சத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது அல்ல. கலை கலைக்கானதே, மக்களுக்கானது அல்ல.

ஒரு பொழுதும் மொசார்ட்டின், பீத்தோவானின், பாக்-இன் இசையை என்னால் முழுவதுமாக உணர்ந்துகொள்ளவே முடியாது. அதன் பிரச்சனை என்னைச் சார்ந்ததே தவிர, மொசார்ட் - பீத்தோவான் - பாக், சார்ந்தது அல்ல. உணர்ந்துகொள்வதற்கான முயற்சி, படிப்பு, பயிற்சி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

ஒரு புயலிலே ஒரு தோனியை, ஜே. ஜே. சில குறிப்பை, சொல் என்றொரு சொல்லை நீங்கள் உங்களின் முதல் புத்தகமாக படிக்கவே முடியாது. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். உங்களின் தகுதிக்கு புத்தகம் எழுதுவது எழுத்தாளனின் வேலை இல்லை, அவன் புத்தகத்தை படிக்கும் தகுதியை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts