In

என்னைப் பற்றி

நான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகனவள்ளி. பெயர் மட்டும் இல்லை, எங்களிருவருக்கும் வேறு பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு, அதே போல் சில வேற்றுமைகளும்.

ஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் என்பதில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.

பத்தாம் வகுப்பில் நான் மதிப்பெண்களை அள்ளிக் குவித்துவிடுவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் மட்டுமே தான் வாங்கினேன். அதை விட மிகமுக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறையும் நான் அதிக மதிப்பெண்கள் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.

பிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்றது போல் கிறிஸ்துராஜ் கல்லுரியில் இளம் அறிவியல் கணிப்பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன். மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது அதிகம். படிப்பு முடிந்ததும் நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக! அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கேயும் கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும். நான் இன்றிருக்கும் நிலைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என் புதுதில்லி வாழ்க்கை மிக முரடனாக இருந்த என்னை இன்றைக்கு நான் இருக்கும் அளவிற்காவது மாற்றியது என்றால் அது தில்லியில் நடந்த மாற்றம் தான்.

பிறகு அங்கிருந்து பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இந்த முறை தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம், சாப்பாடு தங்குவது என. கொஞ்சம் போல் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேருக்காக புனேவில் ஒன்றரை ஆண்டுகள் வேலைசெய்து விட்டு இப்பொழுது திரும்பவும் பெங்களூர் வாசம். இந்தமுறை தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழிக்க ஆரம்பித்திருந்தேன் சொந்தக்காரர்கள் என்று யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.

காலம் என் கால்களையும் கல்யாணம் என்ற அன்பால் கட்டிப் போட்டது, மகிழ்ச்சியான குடும்பம் - நன்மாறன் பொகுட்டெழினி என்றொரு பையனும் நன்மதி கேரொலைன் என்ற பெண்ணும் உண்டு. இரண்டாண்டு கால கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தொடர முடியாமல் அமெரிக்க வேலை காரணமாய், கிரீன்வில் - சௌத் கரோலினாவில் தற்சமயம் வாசம். அன்பான மனைவி, அழகான குழந்தை, மனதையும் பையையும் நிறைவாக்கும் வேலை என்று என் கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

Popular Posts